சுடச்சுட

  

  வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 14th April 2017 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Election_UP

  வாக்களிப்பு ஒப்புகைச் சீட்டு இல்லாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாக்களிப்பு ஒப்புகைச் சீட்டு இல்லாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  நீதிபதி ஜெ.செலமேஷ்வர் தலைமையிலான அமர்வு முன், இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
  மனுதாரர் தரப்பில் மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது, அவர் கூறியதாவது:
  அண்மையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
  எனவே, வாக்களிக்கும் முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வாக்களிப்பு ஒப்புகைச் சீட்டு அவசியமாகிறது.
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள பொத்தானை வாக்காளர் அழுத்துகிறார். எனினும், அவரது வாக்கு சரியாகப் பதிவாகியுள்ளதா என்பதை அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை.
  தான் அளித்த வாக்கு, தனது விருப்பமான வேட்பாளருக்குத்தான் சென்றுள்ளது என்பதை வாக்காளர் அறிந்து கொள்ள ஒரே வழி வாக்களிப்பு ஒப்புகைச் சீட்டு மட்டுமே. இது அல்லாமல், வேறு எந்த வழியிலும் இந்த விவரத்தை உறுதிப்படுத்த முடியாது என்றார் சிதம்பரம்.
  அப்போது மூத்த வழக்குரைஞர் கபில் சிபில் குறுக்கிட்டுப் பேசுகையில், "இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. தற்போது எந்த தொழில்நுட்பத்திலும் ஊடுருவ முடியும்; முறைகேடு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது' என்று குறிப்பிட்டார்.
  இதையடுத்து, வழக்கின் விசாரணையை மே மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த நீதிபதி செலமேஷ்வர் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai