சுடச்சுட

  
  sc

  நாட்டில் அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் வழக்காடு மையம் தாக்கல் செய்துள்ள முறையீட்டு மனுவுக்கு இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மக்கள் வழக்காடு மையம் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான தகவல்களை தகவல் உரிமைச் சட்டப்படி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, கடந்த பிப்ரவரி 14-இல் வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, அந்த அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
  இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், மோகன் எம். ஷாந்தனகௌடர் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:
  நாட்டின் விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதும் அதை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் சமூகம் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவர்கள் என்பதையும் மனுதாரர் விளக்கியுள்ளார். ஆனால், விவசாயிகள் தற்கொலைகளுக்கும் மரணத்துக்கும் காரணமான விஷயத்தை அறிவதற்காக மனுதாரர் விடுத்துள்ள கோரிக்கைகளின் தன்மையை விசாரிக்காமல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது.
  மாநிலத்தின் கடமை: விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் முக்கியக் காரணமான "துயரம்', அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு மாநிலத்துக்கு உண்டு. இந்த விஷயத்தை வரும்முன் காப்பது மற்றும் கருணை அடிப்படையில் அணுகுவது என இரு பகுதிகளாகப் பிரித்து மனுதாரர் யோசனை கூறியுள்ளார்.
  மாநிலத்தில் விவசாயிகள் மரணம் அதிக அளவில் நிகழும் போது, தனது குடிமக்களை பாதுகாக்க வேண்டிய அக்கறையும் கவலையும் மாநிலத்துக்குத்தான் உள்ளது. மேலும், ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல் அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்குத்தான் உள்ளது.
  மாநில நலன், சமூக நீதி ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் ஜனநாயக அரசியல். இயற்கை பேரிடர், வறட்சி, நிதியின்மை போன்ற பிரச்னைகள்தான் விவசாயிகள் மரணத்துக்குக் காரணம் எனத் தெரிய வருவதால், அதைத் தடுக்கவும் அப்பிரச்னைகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநிலங்களின் கடமையாகும். மிகவும் கவலை அளிக்கக் கூடிய இந்த விவகாரத்தில் மௌனம் சாதிப்பது தீர்வாகாது.
  வழக்குரைஞர் நியமனம்: எனவே, இந்த மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் வழக்குரைஞராக (அமிகஸ் குரே) கோபால் சங்கர் நாராயண் நியமிக்கப்படுகிறார். இந்த மனுவுக்கு தமிழக அரசு இரு வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதை "தஸ்தி நோட்டீஸ்' ஆக தமிழக அரசுக்கு மனுதாரர் தரப்பு வழங்க உத்தரவிடுகிறோம். இந்த நோட்டீஸ் நகலை வழக்குரைஞர் கோபால் சங்கருக்கும் வழங்க வேண்டும் என உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  நீதிபதிகள் அறிவுரை

  விவசாயிகள் தற்கொலை தொடர்பான மனு மீதான விசாரணையில் பங்கேற்பாளராக தமிழக அரசு இடம் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
  இது தொடர்பாக நீதிபதிகள் தமிழக அரசுக்கு வழங்கியுள்ள அறிவுரை வருமாறு:
  இந்த மனுவுக்குப் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தனக்கு எதிரான வழக்காக தமிழக அரசு கருதாமல், விவசாயிகள் பிரச்னைகளைக் களைய வழிமுறைகளை ஆராயும் வாய்ப்பாகக் கருத வேண்டும். ஒரு பங்கேற்பாளராக இந்த விசாரணையில் மாநில அரசு பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
  இந்த மனு மீதான அடுத்த விசாரணையின் போது, விவசாயிகளின் துயர் துடைக்க வகை செய்யும் திட்டங்கள், நடவடிக்கைகள் போன்ற விவரங்களுடன் தமிழக அரசு தரப்பு வந்தால் பாராட்டுவோம்.
  ஆரம்பத்திலேயே இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டால் சூழ்நிலையின் தீவிரம் குறையும். இதைச் செய்யத் தவறினால் வேறு கோணத்தில் தீவிரமாகி, பிரச்னையை சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai