சுடச்சுட

  

  ஹாஜி அலி தர்காவை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள்: மே 8-க்குள் அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 14th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மும்பை ஹாஜி அலி தர்காவை சுற்றியிருக்கும் ஆக்கிரமிப்புகளை வரும் மே 8-ஆம் தேதிக்குள் அகற்றுமாறு அந்த தர்காவின் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவை சுற்றி சுமார் 908 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு தனிநபர்கள் சார்பில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  இந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், "மும்பை மாநகராட்சியும், மும்பை ஆட்சியர் அலுவலகமும் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டது. எனினும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
  இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளையினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
  இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது, இந்த ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்ற அனுமதிக்க வேண்டுமென்று ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை தன்னார்வலர்கள் சார்பில் கோரப்பட்டது.
  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் மே 8 ஆம் தேதி அல்லது அதற்குள்ளாக அந்தப் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஹாஜி அலி தர்கா அறக்கட்டளையினருக்கு உத்தரவிட்டனர். அதேநேரத்தில், தர்கா அமைந்திருக்கும் 171 சதுர மீட்டர் பரப்பளவுக் கொண்ட பகுதிக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai