சுடச்சுட

  

  ஹைதராபாதை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்: அசீமானந்த்

  By DIN  |   Published on : 14th April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சுவாமி அசீமானந்த், மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாதை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  ஹைதராபாதிலுள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007-இல் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியாகினர். இந்த வழக்கில் சுவாமி அசீமானந்த், பரத் மோகன்லால் ராதேஷ்வர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 2010-இல் அசீமானந்த் கைது செய்யப்பட்டார். இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் தர்காவில் கடந்த 2007-இல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கிலும் அசீமானந்த் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். எனினும், அவர் இந்த வழக்கிலிருந்து கடந்த மார்ச் 8-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசீமானந்த் ஹைதராபாதை அடுத்த சஞ்சல்குடா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
  இந்நிலையில், ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமீன் கோரி அசீமானந்த் உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதையடுத்து, ரூ. 50,000-க்கான இரு நபர் ஜாமீன், நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஹைதராபாதை விட்டு வெளியேறக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளின்பேரில் அவருக்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், கடந்த 31-ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
  இந்நிலையில், ஹைதராபாதை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கோரி அசீமானந்த் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உடல்நலிவு காரணமாக மேற்கு வங்கத்தில் அவதியுறும் தாயைப் பார்க்க வேண்டியுள்ளதாலும், தனக்கு மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளதாலும் ஹைதராபாதை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
  இந்த மனு மீது வரும் 21-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai