சுடச்சுட

  

  இளைஞர்களின் தாக்குதலை பொறுத்துக் கொண்ட வீரர்களை பாராட்டுகிறேன்

  By DIN  |   Published on : 15th April 2017 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  police

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலரால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டபோதும் பொறுமை காத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்களுக்கு அந்த மாநில காவல் துறை டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட சென்றுகொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களை சில இளைஞர்கள் தாக்கினர். அதை சிலர் செல்லிடப்பேசிகளில் விடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த விடியோ காட்சி மிக வேகமாக பரவி வருகிறது.
  அந்த விடியோவை ஆய்வு செய்த சிஆர்பிஎஃப், அந்த சம்பவம் உண்மைதான் என்று தெரிந்துகொண்டதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
  அந்தப் புகாரின் பேரில் சம்பவம் நேரிட்ட பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஜிபி வைத் கூறியதாவது:
  சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  தாக்குதல் நடத்தியபோது பொறுமை காத்த வீரர்களைப் பாராட்டுகிறேன். அந்த சமயத்தில் உலகின் வேறு எந்த ராணுவமாக இருந்திருந்தால் உரிய பதிலடி கொடுத்திருப்பார்கள். அந்த இளைஞர்களும் பதிலடியில் பலியாகி இருப்பார்கள் என்று வைத் தெரிவித்தார்.
  முன்னதாக, ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 8 பேர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
  இந்தச் சம்பவம் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வைத் தெரிவித்தார்.
  இந்நிலையில், இடைத் தேர்தல் நடைபெற்ற நாளில் ராணுவ வீரர்களால் ஜீப்பில் கட்டி வைத்து அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் யார் என்று அடையாளம் காணப்பட்டார். அந்த இளைஞரின் பெயர் ஃபரூக் தர்.
  அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது 53-ஆவது பிரிவு ராஷ்ட்ரீய ரைபிள் வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ராணுவம் ஏற்கெனவே உறுதி அளித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai