சுடச்சுட

  

  உலகத் தரத்துக்கு இணையாக இந்திய உயர் கல்வியை மேம்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

  By DIN  |   Published on : 15th April 2017 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  president

  இந்திய பல்கலைக்கழகங்களின் கல்வி உலகத் தரத்துக்கு உயர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.

  பெங்களூரு விதான செளதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பொருளாதாரப் பள்ளிக்கு (டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எக்கானாமிக்ஸ்) அடிக்கல் நாட்டி அவர் பேசியது:
  கர்நாடக அரசு சார்பில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயரில் தொடங்கப்பட்டுள்ள பொருளாதாரப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியுள்ளது பெருமிதமாக உள்ளது. இந்த கல்வி நிறுவனம், உலகத்தரமான கல்வியை வழங்க வேண்டும்.

  உலகத் தரத்திலான கல்வியை வழங்குவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் இந்த கல்வி நிறுவனத்தை மாநில அரசு நடத்த வேண்டும். தலைசிறந்த மாணவர்களை இக்கல்வி நிறுவனம் ஈர்க்கும் வகையில் கல்வித்தரம் அமைந்திருக்க வேண்டும்.

  இந்தியாவில் 760 பல்கலைக்கழகங்கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டக் கல்லூரிகள் உள்ளன. ஆனால், நமது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் கல்வித்தரம் திருப்திகரமாக இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மிகபிரமாண்டமான கல்வி உள்கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு எதை சாதித்திருக்கிறோம் என்று கடந்த 5 ஆண்டுகளாகக் கேட்டுவருகிறேன். ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மேல்படிப்புக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்துக்குச் செல்கின்றனர்.

  நமது நாட்டில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தும் தரமான கல்விக்கான சூழல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

  நமது இந்திய பல்கலைக்கழகங்கள் நோபல் பரிசு பெற்ற மற்றொரு சி.வி.ராமனை உருவாக்க தவறியது ஏன்? பன்னாட்டளவில் புகழ்பெற்று விளங்கிய நாளந்தா, தக்ஷீலா பல்கலைக்கழகங்கள் இருந்த இந்திய நாட்டில் தற்போது தரமான கல்விக்கான சூழல் பல்கலைக்கழகங்களில் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது. உலகின் ஆற்றல் கூடமாக இந்தியா விளங்க வேண்டும். பொருளாதாரத்தில் மட்டும் மேம்பட்டால் போதாது. மொத்த தேசிய மகிழ்ச்சித் தன்மையிலும் இந்தியா மேம்பாடு அடைய வேண்டும்.

  உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக உயர வேண்டும் என்று ஆசைப்படுவது உண்மைதான். மொத்த உற்பத்திப்பொருள் விகிதத்தில் இந்தியா உயர்ந்து வருவது மட்டும் போதாது. திறன் மேம்பாட்டில் நாம் எதிர்பார்த்த சாதனைகளைப் படைக்கவில்லை.

  வளர்ச்சி என்பதன் பொருள் தற்போது மாறிவருகிறது. உலக வங்கி, சர்வதேச பண அமைப்பு (ஐஎம்எஃப்) உள்ளிட்ட அமைப்புகள் மொத்த உற்பத்திப்பொருள் விகிதத்தை (ஜிடிபி) மட்டுமல்லாது, ஜிஎன்எச் எனப்படும் மொத்த தேசிய மகிழ்ச்சித் தன்மையையும் ஆராய்ந்து வளர்ச்சி நிலையை கணக்கிடுகிறார்கள்.

  இந்திய மக்கள்தொகையின் நன்மையை அறுவடை செய்ய வேண்டுமானால் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே, திறன் மேம்பாட்டுக்கு தனியாக பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.

  ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து வெளியே வருகிறார்கள். ஆனால், அவர்களின் திறன்கள் வேலைக்கு உகந்ததாக மேம்படுத்தப்பட வேண்டும். இந்த சவாலை சமாளிப்பதற்காகவே திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க அறிவுறுத்துகிறேன். திறன்மேம்பாடு கவர்ச்சிகரமாக இல்லாவிட்டாலும்,இந்திய சூழலுக்கு மிகவும் அவசியமாகும் என்றார்.

  விழாவில் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, முதல்வர் சித்தராமையா, உயர் கல்வித் துறை அமைச்சர் பசவராய் ராயரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  லண்டன் மாதிரியில் உலகத் தரம்
  பெங்களூரு ஞானபாரதியில் அமைந்துள்ள பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பொருளாதாரப் பள்ளி அமையவிருக்கிறது. லண்டன் பொருளாதாரப் பள்ளியின் மாதிரியில் அமையவிருக்கும் இப்பள்ளிக்கு கர்நாடக அரசு ரூ.275 கோடியையும், தனியார் நிறுவனங்கள் ரூ.75 கோடியையும் வழங்கவுள்ளன.

  இப்பள்ளியில் பொருளாதாரப் பாடத்தில் இளநிலை, முதுநிலை, பிஎச்.டி. பட்டப் படிப்புகள் வழங்கவிருக்கின்றன. இப்பள்ளி கட்டடத்தில் மாநாட்டு அரங்கம், மாணவர் விடுதி, ஆசிரியர் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு, நீச்சல்குளம், டென்னிஸ் திடல் உள்ளிட்டவை அமைந்திருக்கும்.

  'உயர் கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்'
  உயர் கல்வி மேம்பாட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

  கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசெளதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பொருளாதாரப் பள்ளி (டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எக்கானாமிக்ஸ்) அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியது:
  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயரில் லண்டன் பொருளாதாரப் பள்ளியை போன்ற பொருளாதாரப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது பெருமிதமாக உள்ளது. லண்டன் பொருளாதாரப் பள்ளியில் படித்து பட்டம் பெற்ற முதல் இந்தியர் அம்பேத்கர் என்பதால் அவரது பெயரில் இப்பள்ளி அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. 1923-ஆம் ஆண்டிலேயே தாராள பொருளாதாரம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றை எடுத்துரைக்கிறார்.

  அம்பேத்கர் கூறிய பொருளாதாரத் தத்துவங்களைத்தான் 1991-ஆம் ஆண்டில் இந்தியா கடைப்பிடிக்கத் தொடங்கியது. தாராள பொருளாதாரக் கொள்கை வெற்றிபெற வேண்டுமானால், ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று அப்போதே கூறியவர் அம்பேத்கர். அம்பேத்கரின் 126-ஆவது பிறந்த நாளின் தொடக்கத்தில் அவரது பெயரில் பொருளாதாரப் பள்ளி தொடங்குவது அவருக்கு செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலியாகும். இப்பள்ளியில் தத்துவார்த்த மற்றும் பயன்பாட்டு பொருளாதாரம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அளிப்பதே நோக்கமாக இருக்கும்.

  இத்துடன் சமூக அறிவியலும் போதிக்கப்படும்.இப்பள்ளிக்காக கர்நாடக அரசு ஏற்கெனவே ரூ.150கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் ரூ.75 கோடி விரைவில் ஒதுக்குவதோடு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளித்துவருவதை உறுதி செய்துள்ளது. உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 27 சதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரி விகிதமான 24 சதத்தைவிட கூடுதலாகும். அடுத்த 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 40 சதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயில முன்வரும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்படும்.

  இதன்மூலம் உயர்கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும். எனது தலைமையிலான அரசு பசவண்ணர், அம்பேத்கர், மகாத்மாகாந்தியின் தத்துவங்களை தவறாமல் கடைப்பிடித்துவருகிறது. அடித்தள மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்பதையே அம்பேத்கரும் மகாத்மா காந்தியும் எடுத்துரைத்தனர். அதன்படியே அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு எனது அரசு உழைத்துவருவதை கடந்த 5 பட்ஜெட்கள் மூலம் அறியலாம். இதற்காகவே அன்னபாக்கியா, ஷீரபாக்கியா திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதை சிலர் விமர்சித்தாலும் சமூகவளர்ச்சிக்கு இது அவசியமாகும் என்பதை அரசு அறிந்துள்ளது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai