சுடச்சுட

  

  ஒமர் அப்துல்லா செயல்பாட்டின் தோல்வியே இன்றைய கல்வீச்சு சம்பவங்களுக்கு காரணம்: மெஹபூபா முஃப்தி

  By DIN  |   Published on : 15th April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mehbooba-mufti

  கடந்த 2010-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கல்வீச்சு சம்பவங்களை ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு சரியாக கையாளாத காரணத்தினாலேயே பள்ளத்தாக்கு பகுதி தற்போது மோசமான நிலைக்கு சென்றதற்கு காரணம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டினார்.
  காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழும் கல்வீச்சு சம்பவங்களுக்கு மாநில அரசு நிதி உதவி செய்து வருவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை குற்றம்சாட்டினார்.
  அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் மெஹபூபா இவ்வாறு தெரிவித்தார்.
  இதுகுறித்து ஜம்முவில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  கடந்த 2010-ஆம் ஆண்டில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி செய்து வந்தது. அப்போது, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த சமயத்தில் இளைஞர்களை தடுப்பதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் அந்த அரசு எடுக்கவில்லை. அதன் காரணமாகவே கடந்த ஆண்டு திடீரென கல்வீச்சு சம்பவங்கள் நடக்கத் தொடங்கியபோது எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.
  இளைஞர்கள் கற்களை வீசுவதற்கு ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) நிதி உதவி செய்து வருவதாகக் குற்றம்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே எனது தலைமையிலான அரசு பணியாற்றி வருகிறது என்றார் மெஹபூபா.
  இளைஞரை ஜீப்பில் கட்டிவைத்த ராணுவ வீரர்கள்?-பரவி வரும் புதிய விடியோ: இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன்புறம் ராணுவ வீரர்கள் கட்டிவைத்திருந்தது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
  ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றபோது இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
  அப்போது, ராணுவ ஜீப் மீது கற்கள் வீசப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன்புறம் வீரர்கள் கட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
  இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஏற்கெனவே, ராணுவ வீரர்களை இளைஞர்கள் தாக்குவது போன்றும், இளைஞர்கள் சிலரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்வது போன்றும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
  அறிக்கை கோரினார் மெஹபூபா: இந்நிலையில், இந்த விடியோ காட்சிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் சமர்ப்பிக்குமாறு அந்த மாநில காவல் துறைக்கு முதல்வர் மெஹபூபா முஃப்தி உத்தரவிட்டுள்ளார்.
  இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த விடியோ காட்சிகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai