சுடச்சுட

  

  ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களை, கடல் மார்க்கமாக கப்பல்களில் சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
  ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான 3 நாள் பயிற்சி முகாம், மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
  இந்த முகாமில் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:
  ஹஜ் புனித யாத்திரைக்கான புதிய கொள்கைகளை வகுப்பதற்காக, உயர் நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் குழுவானது, கடல் மார்க்கமாக, ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
  தற்போது வகுக்கப்படும் புதிய கொள்கை, யாத்திரை செல்வோருக்கு அதிக வசதிகளை அளிக்கும் வகையில் உருவாக்கப்படும்.
  இதற்கு முன்பு, மும்பையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு கடல் மார்க்கமாக மேற்கொள்ளப்பட்டு வந்த புனித யாத்திரை, கடந்த 1995-ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, நாடு முழுவதும் 21 இடங்களில் இருந்து விமானங்கள் மூலமாக சவூதி அரேபியாவுக்கு யாத்ரீகர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
  இந்நிலையில், மீண்டும் கடல் மார்க்கமாக, ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் ஹஜ் யாத்திரை கமிட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  விமானப் பயணத்தைக் காட்டிலும், கடல் மார்க்கமாக ஹஜ் யாத்திரை நடைபெற்றால், செலவுகள் பாதியாகக் குறையும் என்றார் அவர்.

  ஒருமித்த கருத்துக்குப் பிறகே "முத்தலாக்' சட்டம்

  முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்படும் "முத்தலாக்' எனப்படும் விவாகரத்து முறை தொடர்பாக, ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
  அவர் மேலும் கூறியதாவது:
  "முத்தலாக்' விவாகரத்து முறை ஒரு முக்கிய விஷயமாகும். அதன் மீதான ஆக்கப்பூர்வமான விவாதத்தை அழித்துவிடக் கூடாது. முத்தலாக் விவாகரத்து முறையில், முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்து சீர்திருத்தம் தொடங்க வேண்டுமே தவிர வெளியில் இருந்து அல்ல. முத்தலாக் விவாகரத்து தொடர்பாக, அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உள்பட்டே சட்டம் இயற்றப்படும். அதற்கு முன் முத்தலாக் சட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை அரசு காத்திருக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai