சுடச்சுட

  
  Black-Money

  உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு உருவான கருப்புப் பணத்தை ஒழிக்க 2-ஆம் கட்ட கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
  இந்த நடவடிக்கையில் நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்களிடம் கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
  இதில், சந்தேகத்துக்குரிய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது மூலம் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித் துறையினர் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 60 ஆயிரம் பேரில் 1,600 பேர் அதிகஅளவில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது.
  ரூ.5 லட்சம் முதல்... இரண்டாவது கட்ட கருப்புப் பண வேட்டையில் ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. முதல் கட்டத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  அரசு அதிகாரிகளுக்கு குறி? இந்த முறை மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகளுக்கும் வருமான வரித் துறை குறி வைக்கும் என்று தெரிகிறது.
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்த அரசு ஊழியர்கள், வருமானத்துக்கு அதிகமாக தங்கம், நிலம், கட்டடம் உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்த அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட இருக்கிறார்கள்.
  இதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதுடன், நாட்டில் அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சமும், ஊழலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  பட்டியல் தயார்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், மற்றவர்கள் பெயரில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் என பல்வேறு தகவல்களை வங்கிகளில் இருந்து வருமான வரித்துறை பெற்று, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
  மேலும் பலர் சிக்குவர்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் போது பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி பலர் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்களின் மூலம் கருப்புப் பணத்தை மாற்றியுள்ளனர் என்று தீவிரமாக சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், இதுபோன்ற இடங்களில் ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட காலகட்டத்தில் அதிக அளவு பணப் புழக்கம் நடைபெற்றுள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
  இதுபோன்ற வழிகள் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களும் வருமான வரித்துறையின் பிடியில் சிக்குவார்கள்.
  ரூ.9,334 கோடி கருப்புப் பணம்: நவம்பர் 9-ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் ரூ.9,334 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  நாடு முழுவதும் 2,362 சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில், ரொக்கமாக மட்டும் ரூ.622 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
  உரிய வரி செலுத்தாமல் உருவாக்கப்படும் கருப்பு பணம், நாட்டின் பொருளாதாரத்தை பல்வேறு வழிகளில் பாதித்து வருகிறது. எனவே, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டப்படுகிறது என்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்னதாக, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கருப்புப் பணத்துக்கு எதிரான முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் 9 லட்சம் பேர் வரை வருமான வரித் துறையினரிடம் விளக்கமளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai