சுடச்சுட

    

    குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கச் செய்ய இந்தியா முயற்சி: எம்.ஜே.அக்பர்

    By DIN  |   Published on : 15th April 2017 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    akbar

    பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கச் செய்ய இந்தியா முயற்சித்து வருவதாக வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்தார்.
    இந்தியக் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ்(46) தங்கள் நாட்டில் வேவு பார்த்ததாகவும், நாசகாரச் செயல்களுக்குத் திட்டமிட்டதாகவும் கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு அண்மையில் தூக்கு தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்று கூறிய இந்தியா, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.
    இந்த விவகாரம் குறித்து வியாழக்கிழமை கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய இந்தியா எந்த எல்லை வரைக்கும் செல்லும்' என்று தெரிவித்திருந்தார்.
    இது பற்றி இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்ளே கூறுகையில், "குல்பூஷண் ஜாதவின் இருப்பிடம் மற்றும் அவரது உடல்நிலை ஆகியவை குறித்து இந்தியாவுக்கு எதுவும் தெரியாது. அவரை தாயகத்துக்கு பத்திரமாக மீட்டுக் கொண்டுவர நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். ஆனால், அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கூற இயலாது' என்று கூறியிருந்தார்.
    இந்நிலையில், வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர், மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    ஜாதவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமற்ற ஒரு நீதிமன்றம் (பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்) அவர் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. அப்படி இருந்தபோதிலும் அவருக்கு நீதி கிடைக்கச் செய்ய நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஜாதவ் தாயகம் திரும்புவதில் நாங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
    காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை ஜனநாயக விரோத சக்திகள், பின்னணியில் இருந்து தூண்டி விடுகின்றன. காஷ்மீரில் சுதந்திரமான, நியாயமான சூழல் நிலவவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
    உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு அந்த மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
    மேற்கு வங்கம் தற்போது மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் ஊழல், தேக்கமடைந்துள்ள பொருளாதாரம் ஆகியவை மாநிலத்தின் முக்கிய பிரச்னைகள் என்றார் அக்பர்.
    ஜாதவ் உயிருடன் உள்ளாரா?: இதனிடையே, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்ஷி கூறுகையில், "குல்பூஷண் ஜாதவ் உயிருடன் உள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்காக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஜாதவை பாகிஸ்தான் ஏற்கெனவே சித்திரவதை செய்து கொன்றிருக்கக் கூடும்' என்று சந்தேகம் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai