சுடச்சுட

  

  தில்லிவாசிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள்! 'மாநகராட்சித் தேர்தல்-2017'

  By புதுதில்லி  |   Published on : 15th April 2017 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கல்வி, சுகாதாரம், சாலைப் பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் மாநகராட்சி நிர்வாகங்கள் நிறைவேற்றாத பல பிரச்னைகளைத் தீர்க்க அரசியல் கட்சிகள் உத்தரவாதம் தர வேண்டும் என்பது நகரவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  தில்லியில் வடக்கு, தெற்கு மாநகராட்சிகளின் வரம்பில் தலா 104 வார்டுகள், கிழக்கு தில்லி மாநகராட்சி வரம்பில் 64 வார்டுகள் உள்ளன. மாநகராட்சிகளை ஆளும் பாஜக, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. ஐக்கிய ஜனதா தளம், ஸ்வராஜ் இந்தியா, பகுஜன் சமாஜ் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை இத்தேர்தலில் களம் இறக்கியுள்ளன.

  இந்நிலையில் தில்லி முழுவதும் பரவலாகக் காணப்படும் சுகாதாரச் சீர்கேடு, கல்வி, சாலை வசதிகள், கழிவுநீர் மேலாண்மை குறைபாடு போன்றவை இந்தத் தேர்தலில் முக்கிய பங்காற்றும் காரணிகளாகியுள்ளன.

  தேர்தல் உத்திகள்: தில்லி மாநகராட்சியை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தனது வசம் வைத்துள்ள பாஜக, தனது வெற்றிக்காக கட்சியின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா வகுக்கும் தேர்தல் உத்திகளை நம்பி உள்ளது. அமித் ஷாவின் ஆதரவாளரான மனோஜ் திவாரி எம்.பி.யை தில்லி பாஜக தலைவராக்கியுள்ளது அக்கட்சி மேலிடம்.

  தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தனது சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய செயல்பாட்டை மையப்படுத்தி மாநகராட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

  சட்டப்பேரவைத் தேர்தலில் கடும் சரிவைத் தழுவிய காங்கிரஸ் கட்சி, மக்களின் நம்பிக்கையைப் பெற ஒரு முறை மாநகராட்சியை ஆள வாய்ப்புத் தருமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  கழிவு மேலாண்மை: தில்லியில் ஆளும் மூன்று மாநகராட்சிகளும் அவற்றின் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 16 சதவீதமான ரூ.1,500 கோடியை நகர்ப்புறத்தை பொலிவாக்க செலவிட்டன. இதன் விளைவாக, கிழக்கு தில்லி 1,600 மெட்ரிக் டன், வடக்கு தில்லி 2,800 மெட்ரிக் டன், தெற்கு தில்லி 1,200 மெட்ரிக் டன் அளவுக்கு கழிவுகளை தினமும் அகற்றின.

  ஓக்லா, காஜிபூர், பால்ஸ்வா ஆகிய இடங்களில் உள்ள கழிவுகள் கொட்டும் இடத்தில் 15-20 மீட்டர் சுற்றுவட்டார அளவுக்கு மட்டுமே நிலத்தில் குப்பைகளைக் கொட்ட வேண்டும். ஆனால், 40 மீட்டர் அளவுக்கு நிலத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. புதிதாக கழிவுகள் கொட்டுவதற்கான குழிகள் இல்லாததால் கழிவுகள் மேலாண்மையில் மூன்று மாநகராட்சிகளும் தோல்வியைத் தழுவியுள்ளன.

  சுகாதாரம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் சுகாதாரச் செலவினத்துக்காக மாநகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2012-இல் தெற்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.319 கோடி ஒதுக்கப்பட்டது. நிகழ் நிதியாண்டில் ரூ.1,088 கோடி ஒதுக்கப்பட்டது. இருப்பினும் 2015, பிப்ரவரி முதல் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை சரியாக மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால், ஐந்து முறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

  'துப்புரவுப் பணியாளர்கள் சம்பள விவகாரத்தில் மாநகராட்சிகளை ஆளும் பாஜக ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது' என்று தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டுகிறார்.

  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட ஆண்டு நிதியான ரூ.3,128 கோடியை ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும் ரூ.2,457 கோடி ஆகக் குறைத்தது' என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் குற்றம்சாட்டுகிறார்.

  சாலை வசதி: தில்லியில் 2010-இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதையொட்டி, தலைநகரில் மாநகராட்சிகள் வசம் இருந்த 80 சதவீத சாலைகள் பராமரிப்பு மாநிலப் பொதுப் பணித் துறைவசம் ஒப்படைக்கப்பட்டன. இதனால், மாநகராட்சிகளின் சாலைகளைப் பராமரிக்கும் வரம்பு குறைந்தது. இதன் விளைவாக சாலைப் பராமரிப்புக்காக ரூ.300 கோடி மட்டுமே மாநகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு சாலை வசதிகளை பராமரிக்க முடியாததால் தலைநகரின் சாலைகள் சேதம் அடைந்து பழுதுபார்க்கும் நிலையில் உள்ளன.

  காற்று மாசு: தில்லியில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் கட்டுமானக் கழிவுகளை அகற்றும் பணிகளில் அலட்சியம் காட்டுவதாகப் புகார் உள்ளது. இதன் விளைவாக தலைநகரில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்டதைத் தொடர்ந்து, விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை கையாண்டதற்காக மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 5,456 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சுகாதாரம்: வடக்கு தில்லி மாநகராட்சி வரம்பில் ஐந்து மருத்துவமனைகளும், கிழக்கு தில்லி வரம்பில் ஒரு மருத்துவமனையும் உள்ளன. ஆனால், தெற்கு தில்லி மாநகராட்சி வரம்பில் ஒரு மருத்துவமனை கூட இல்லை. இவற்றில் மலேரியா, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போதுமான அளவுக்கு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் மலேரியாவுக்கு ஒருவர் பலியான சம்பவத்தையும், சிக்குன்குனியா நோயால் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதையும் சுகாதாரத் துறை பதிவு செய்துள்ளது.

  கல்வி: மாநகராட்சிகள் வசம் உள்ள சுமார் 1,600 பள்ளிகளில் 2016-17 கல்வியாண்டில் மட்டும் வடக்கு தில்லியில் 56 ஆயிரம் மாணவர்கள், தெற்கு தில்லியில் 54 ஆயிரம் மாணவர்கள், கிழக்கு தில்லியில் 26 ஆயிரம் மாணவர்கள் வெளியேறியுள்ளனர். அதில் அதிகமானோர் மாணவிகள். பல மாநகராட்சிப் பள்ளிகளில் நூலக வசதிகள்கூட இல்லை.

  இதுபோன்ற பல அடிப்படைப் பிரச்னைகள், மாநகராட்சிகளின் நிர்வாகத்தை மையப்படுத்தியே அமைந்துள்ளது. இதனால், அவற்றைக் களைய உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்பதில் தில்லிவாசிகள் உறுதியாக உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai