சுடச்சுட

  

  புவனேசுவரத்தில் இன்று பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்

  By DIN  |   Published on : 15th April 2017 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜகவின் இரு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் புவனேசுவரத்தில் சனிக்கிழமை (ஏப்.15) தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள், 3 துணை முதல்வர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
  கட்சியின் தேசிய செயற்குழுவை முன்னிட்டு ஊடக மையத்தை அவர் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். அதன் பிறகு தர்மேந்திர பிரதான், செய்தியாளர்களிடம் கூறியது: உடல்நலக் குறைவு காரணமாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புவனேசுவரம் வந்தடைகிறார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு நேராகச் செல்லும் அவர், அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு புவனேசுவரம் ஜனதா மைதானத்தில் நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மாலை 5 மணிக்கு பங்கேற்கவிருக்கிறார்.
  சோதனைக் கூடமாக ஒடிஸா: ஏழைகளுக்கான நலவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தி பார்க்கும் சோதனைக் கூடமாக ஒடிஸா மாநிலத்தை மாற்ற பிரதமர் முடிவு செய்துள்ளார். மாநிலத்தில் பிஜு ஜனதாதள ஆட்சியை அனுபவித்துவிட்டு மக்கள் நொந்துபோய் இருக்கின்றனர். கடந்த 2014 பொதுத் தேர்தலைக் காட்டிலும் அண்மையில் நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தேசிய செயற்குழு ஒடிஸாவில் கூடுகிறது.
  மக்களின் தேவைகள், விருப்பங்களை நிறைவேற்றுவதில் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ஒடிஸா மாநிலத்துக்கு ரயில்வே துறை மேம்பாட்டுக்கென கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5,200 கோடியை ஒதுக்கியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. மாநிலத்தின் மேம்பாட்டில் இருக்கும் அக்கறையினால்தான் மோடி அரசு, இத்தகைய பெரிய நிதி ஒதுக்கீட்டை ரயில்வே துறைக்கு அளித்திருக்கிறது.
  அதேபோல 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி நாட்டிலேயே மிக அதிகமாக பலன் பெற்ற மாநிலம் ஒடிஸா. மாநிலத்தின் ஊரக வளர்ச்சிக்கு மட்டும் மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருக்கிறது. பிரதமரின் திட்டங்கள், செயல்பாடுகளை ஒடிஸா மக்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட ஊராட்சித் தேர்தலின் முடிவுகள் மூலம் இது தெளிவாகிறது என்றார் பிரதான். இதற்கிடையில் புவனேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை காலையில் வந்து சேர்ந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தலைமைச் செயலகம் அருகே ஏ.ஜி.சதுக்கத்தில் அமைந்திருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒடியா புத்தாண்டையொட்டி நடந்த கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai