சுடச்சுட

    

    மத அடிப்படையிலான இடஒதுக்கீடு மற்றொரு பாகிஸ்தான் உருவாக வழிவகுக்கும்: வெங்கய்ய நாயுடு

    By DIN  |   Published on : 15th April 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkiah-naidu

    "மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது, மற்றொரு பாகிஸ்தான் உருவாக வழிவகுக்கக்கூடும்' என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
    சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி, ஹைதராபாதில் பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் பேசியதாவது:
    மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது, மக்களை மதரீதியில் மேலும் பிளவுபடுத்திவிடும். சமூகத்தில் ஒற்றுமையின்மை அதிகரித்து, அமைதியற்ற நிலை ஏற்படும். எனவேதான், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
    ஆனால், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா அரசு, மதரீதியிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த விரும்புகிறது. இதேபோன்ற நடவடிக்கையை, ராஜசேகர ரெட்டி (ஒன்றுபட்ட ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர்), சந்திரபாபு நாயுடு (தற்போதைய ஆந்திர முதல்வர்) ஆகியோர் மேற்கொள்ள முயன்றபோதும் பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.
    மத அடிப்படையிலான இடஒதுக்கீடு, மற்றொரு தேசப் பிரிவினைக்கு வழிவகுத்துவிடக்கூடும். எனவே, அதனை தொடர்ந்து எதிர்ப்போம்.
    எந்த மதத்தினராக இருந்தாலும், சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்போருக்கு இடஒதுக்கீடு வழங்குவதையே, இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. இந்த நிலையில் இருந்து விலகுவதை, அரசமைப்புச் சட்டம் அனுமதிக்காது.
    நமது அரசமைப்புச் சட்டத்தை கட்டியெழுப்பிய அம்பேத்கர்கூட, மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை விரும்பவில்லை. சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளார் என்றார் வெங்கய்ய நாயுடு.
    தெலங்கானாவில் பழங்குடியினருக்கும் முஸ்லிம்களில் பின்தங்கியோருக்கும் கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, வரும் 16-ஆம் தேதி மாநில சட்டப் பேரவை கூட்டப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் அண்மையில் அறிவித்தார். இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால், உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai