சுடச்சுட

  
  amith sha

  தமிழக அரசியல் சூழ்நிலை, தேர்தல் உத்திகள் குறித்து கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக அகில இந்தியத் தலைவர் அமித் ஷா வரும் மே 10-ஆம் தேதி சென்னை வருகிறார்.
  சென்னையில் இரண்டு நாள்கள் முகாமிட்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநில அளவில் உள்ள அணிகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  தென் மாநிலங்களில் வலுவாக காலூன்ற ஆர்வம் காட்டி வரும் பாஜகவால் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வகையில் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்துள்ளது, எதிர்க்கட்சியான திமுகவில், அதன் முக்கிய நிர்வாகிகள் மீதான வழக்குகள் போன்ற காரணங்களால் மாநிலத்தில் பாஜக கால் பதிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளதாக அக்கட்சி மேலிடம் நம்புகிறது.
  இதையடுத்து, சென்னைக்கு அடுத்த மாதம் வரும் அமித் ஷா இரு நாள்கள் முகாமிட்டு கட்சியின் செயல்பாடு, தேர்தல் உத்திகள் ஆகியவை குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மக்கள் நலத் திட்டங்களின் பலன்கள் தொடர்பான பிரசார உத்திகளை மாநிலம் முழுவதும் மூத்த நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் வகுக்க அவர் ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.
  அமித் ஷாவின் சென்னை பயணம் தொடர்பாக இன்னும் மாநிலத்தில் உள்ள கட்சித் தலைவர்களுடன் பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், இந்தப் பயணத்துக்கான திட்டம் குறித்து கட்சியின் மேலிடத் தலைவர் முரளிதர் ராவ், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருடன் அமித் ஷா அண்மையில் ஆலோசனை நடத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  தமிழகத்தில் ஆளும் அதிமுவைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் மத்திய வருமான வரித் துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். அத்துறையின் விசாரணை வளையத்துக்குள் இவர்கள் வந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஆளும் பாஜகவின் நெருக்குதலே காரணம் என்று அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமித் ஷா சென்னையில் முகாமிட்டு மேற்கொள்ளவுள்ள வியூகம் தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai