சுடச்சுட

  
  cheque

  மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொண்டவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற பெண் ஒருவருக்கு பரிசு வழங்கும் பிரதமர் மோடி.

  எதிர் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
  அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
  சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த தின விழா, மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் அமைந்துள்ள தீக்ஷாபூமியில் (அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய இடம்) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் புதிதாக அமையவுள்ள ஐஐஎம், ஐஐடி மற்றும் எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
  மேலும், மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் அவர் கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:
  மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் கடந்த சில மாதங்களாக நாட்டில் மின்னணுப் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. அதனை மேலும் அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
  தற்போதைய சூழலில் ஒவ்வோர் ஏடிஎம் மையத்துக்கும் தலா 3 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதேவேளையில் தனிமனிதப் பாதுகாப்புக்கு அதே எண்ணிக்கையிலான போலீஸாரை பணிக்கு ஈடுபடுத்த இயலவில்லை. இன்னமும் ரொக்கப் பணப் பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதுதான் ஏடிஎம் மையங்களுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்தக் காரணம்.
  இந்த நிலையை மாற்றி மின்னணுப் பரிவர்த்தனையை மேம்படுத்தும் நோக்கிலேயே "பீம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் விவரங்களின் அடிப்படையில் செயல்படும் அந்தச் செயலியின் வாயிலாக வங்கி அட்டைகளின் உதவியின்றி பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
  கை விரல் ரேகையைப் பதிவு செய்து அதன் வாயிலாக அந்தச் செயலியில் பணம் செலுத்தலாம். படிக்காத பாமரர்கள்தான் விரல் ரேகையைப் பதிவு செய்வார்கள் என்ற நிலை இதற்கு முன்னர் இருந்து வந்தது. ஆனால், இப்போது உங்கள் விரல் ரேகைப் பதிவு ஊழலுக்கு எதிரான வலிமையான ஆயுதமாக மாறியுள்ளது.
  "பீம்' செயலியை அதிக அளவில் பயன்படுத்தச் செய்யும் நோக்கில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை பயன்பாட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, "பீம்' செயலி பயன்பாட்டாளர்கள், புதிதாக ஒரு நபரை அதில் இணைத்தாலோ அல்லது பரிந்துரைத்தாலோ அவருக்கு "கேஷ் பேக்' திட்டத்தின் கீழ் ரூ.10 வழங்கப்படும். நாளொன்றுக்கு 20 பேரை பரிந்துரைத்தாலே ரூ.200 வரை பணம் திரும்பப் பெறலாம்.
  இதேபோன்று வர்த்தகர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் அதிக அளவில் மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
  ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ.250 கோடி மதிப்பிலான பரிசுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  நாட்டில் உறைவிட வசதி இல்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை வசதிகளுடன் வீடு கட்டித் தருவதே அரசின் இலக்கு என்றார் பிரதமர் மோடி.
  முன்னதாக, தீக்ஷாபூமியில் அம்பேத்கர் நினைவாக மோடி சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார். அப்போது மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
  அனல் மின் நிலையம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி அருகே அமைக்கப்பட்டுள்ள 1980 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

  லாத்தூர் மாணவிக்கு ரூ.1 கோடி பரிசு

  மின்னணுப் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவிக்கு ரூ.1 கோடி சிறப்புப் பரிசை பிரதமர் மோடி வழங்கினார்.
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு மின்னணுப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு பரிசுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து நாகபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.
  அதில், ஷ்ரத்தா மேங்சேட் என்ற மாணவிக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது. அவர் ரொக்கமில்லாமல் ரூ-பே அட்டை வாயிலாக செல்லிடப்பேசி வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai