சுடச்சுட

    

    குறைகுடம் கூத்தாடும்: பாகிஸ்தான் குறித்து மனோகர் பாரிக்கர் கருத்து

    By DIN  |   Published on : 16th April 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manohar parikkar

    ""குறைகுடம் கூத்தாடும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாகிஸ்தான் செயல்படுகிறது'' என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
    இந்தியர் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், அந்த நாட்டின் செயல்பாடுகள் தொடர்பாக மனோகர் பாரிக்கரிடம் தூர்தர்ஷன் செய்தியாளர் எடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது:
    குறைகுடம் கூத்தாடும் என்று பழமொழி ஒன்று உண்டு. அதுபோல், பாகிஸ்தானின் பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
    பாகிஸ்தான் தற்போது ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகிறது. இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தால், பாகிஸ்தானால் அதை நிச்சயமாக எதிர்கொள்ள முடியாது.
    இந்தியா அமைதியைத் தான் விரும்புகிறது; ஆத்திரமூட்டும் பேச்சுக்களை அல்ல. உண்மையில், குல்பூஷண் ஜாதவ் ஈரானில் தான் தங்கியிருந்தார்; பாகிஸ்தானில் அல்ல. தாலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட ஜாதவ், பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
    இந்த விவகாரத்தில் இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. ஏற்கெனவே, இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
    தற்போது, அணுசக்தியைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு, இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும்.
    பாதுகாப்புத் துறை அமைச்சராக நான் பதவி வகித்தபோது, ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றார் மனோகர் பாரிக்கர்.
    முதல்வர் அலுவலகம் விளக்கம்: தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் தந்த அழுத்தம் காரணமாகத் தான் பாரிக்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததாக கூறப்படுவதை கோவா முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது.
    இதுதொடர்பாக, அந்த அலுவலகம் சார்பில் சனிக்கிழமை வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
    காஷ்மீர் பிரச்னை காரணமாகத் தான் பாரிக்கர், மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் என்று கூறப்படுவது தவறான தகவலாகும். கோவாவில் நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாகவும், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கை காரணமாகவும் தான் அவர் மாநில அரசியலுக்கு திரும்ப வேண்டியதாயிற்று என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai