சுடச்சுட

  

  கோவாவில் பாஜகவுக்கு ஆதரவளித்தது ஏன்? சரத் பவார் விளக்கம்

  By DIN  |   Published on : 16th April 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SHARADPAWAR

  கோவாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி தவறவிட்டதாலேயே நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக தங்களது கட்சி வாக்களித்தது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் விளக்கமளித்துள்ளார்.
  அந்த மாநிலத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றிய போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை அக்கட்சி திரட்டவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
  அண்மையில் நடைபெற்று முடிந்த கோவா பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தபடியாக பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
  பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், சுயேச்சைகள் மற்றும் மாநிலக் கட்சிகளான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு பாஜக ஆட்சியமைத்தது. மனோகர் பாரிக்கர் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கோவா மாநில சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
  இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத் பவார், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்கவில்லை என்பது குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
  கோவாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. ஒருவேளை அக்கட்சி கேட்டிருந்தால், நாங்கள் ஆதரவளிக்கத் தயாராக இருந்தோம். வேறு சில கட்சிகளும் அதே நிலைப்பாட்டில்தான் இருந்தன. ஆனால், குறித்த நேரத்தில் தகுந்த முடிவு எடுக்காமல் காங்கிரஸ் காலந்தாழ்த்தியது.
  அதன் விளைவாகவே பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும்பான்மை பலம் எவருக்கும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவளித்து மாநிலத்தில் புதிய அரசை அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இல்லையென்றால் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் இருந்தன. அதைத் தவிர்ப்பதற்காகவே பாஜகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் வாக்களித்தார் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai