சுடச்சுட

  

  ஜாதவ் விவகாரம் எதிரொலி: பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்பு படையுடனான பேச்சுவார்த்தை ரத்து

  By DIN  |   Published on : 16th April 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்புப் படை இடையே அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இந்தியா சனிக்கிழமை ரத்து செய்துவிட்டது.
  இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் மீது உளவுப்புகார் சுமத்தி, பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பதால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
  இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை, பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்புப் படை இடையே மீனவர் விவகாரம், மீட்பு, நிவாரணம் ஆகிய விவகாரங்கள் குறித்து, தில்லியில் வரும் 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது. இதற்காக பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்புப் படை தலைமையிலான குழு, தில்லிக்கு வருகை தர திட்டமிட்டு இருந்தது.
  இந்நிலையில், அந்தக் குழு தில்லிக்கு வருகை தருவதற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதியளிக்கவில்லை என்று இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  இதனிடையே, குல்பூஷண் ஜாதவை இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேசுவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதியளிக்க மறுத்து வருகிறது. இந்தியா விடுத்த வேண்டுகோளை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இதுகுறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறுகையில், "ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசுவது தொடர்பாக இந்தியா விடுத்த வேண்டுகோளை பாகிஸ்தான் 13 முறை நிராகரித்து விட்டது. எனினும், ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேசுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நமது நாடு எடுத்து வருகிறது' என்றார்.
  பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்ட ஜாதவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தான் நீதிமன்றத்தின் இந்நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யவில்லையெனில், பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai