சுடச்சுட

    

    நாட்டின் பொருளாதார நிலை சுணக்கமடைந்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 16th April 2017 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மந்தமடைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்றும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
    இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் உயர்ந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால், நாட்டின் பொருளாதாரச் சூழலை மதிப்பிட்டுப் பார்த்தால், அத்தகைய வளர்ச்சியை அடைந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை.
    வங்கிகள் கடனளிக்கும் விகிதம் வெறும் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அண்மையில் தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதமானது, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த மதிப்பாகும்.
    அதேபோல, நாட்டிலுள்ள மின் நிலையங்களில் சராசரியாக 60 சதவீதம் மட்டுமே உற்பத்தி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உற்பத்தித் திறனானது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறைந்த அளவாகும். மேலும், நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் அதிக அளவில் நடைபெறவில்லை. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பிரதமர் வெளியிட்ட தகவலுக்கும், உண்மையான பொருளாதார நிலைக்கும் அதிக வேறுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது.
    முதலீடு இல்லையென்றால் வேலைவாய்ப்பு இருக்காது. அவ்வாறு வேலைவாய்ப்பு இல்லையெனில் வளர்ச்சியை அடைய முடியாது. மத்தியில் பாஜக அரசு ஆட்சியமைந்த பிறகு முதல் இரு ஆண்டுகளில் வெறும் 4.4 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன.
    காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் இரண்டாண்டு கால ஆட்சியில் 21 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
    தற்போது நாட்டின் பொருளாதா நிலை மிகவும் சுணக்கமடைந்துள்ளது.
    இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்தி பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டியது அவசியம். மத்திய பாஜக அரசின் முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவால் இது என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai