சுடச்சுட

  
  JPNadda

  "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
  மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் "நீட்' நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான சட்டத் திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
  "நீட்' தேர்வு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால்(சிபிஎஸ்இ) நடத்தப்படுகிறது என்பதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களால் அதில் எளிதில் வெற்றி பெற முடியாது. மேலும் கிராமப்புற மாணவர்களுக்கும் இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்று பல்வேறு கருத்துகள் எழுந்தன.
  அவசரச் சட்டம்: இதனால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 2016 - 2017-ஆம் ஆண்டுக்கு மட்டும் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இருப்பினும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை "நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெற்றது.
  நிரந்தர விலக்கு: இதனையடுத்து "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
  ஆனால், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர மத்திய அரசு முன்வரவில்லை.
  "நீட்' தேர்வுக்கு விண்ணப்பம்: இதற்கிடையில் "நீட்' தேர்வுக்கான விண்ணப்பங்கள், தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை சிபிஎஸ்இ வெளியிட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
  முதல்வர் வலியுறுத்தல்: இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார். சென்னைக்கு வந்திருந்த மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடமும் இதுகுறித்து முதல்வர் வலியுறுத்திப் பேசினார்.
  மேலும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அரசு செயலர்கள் தில்லிக்கு இரண்டு முறை சென்று மத்திய அரசிடம் தமிழகத்துக்கு "நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தினர்.
  மத்திய அரசு மறுப்பு: இந்த நிலையில், "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
  இது தொடர்பாக சென்னைக்கு வந்திருந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விமான நிலையத்தில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
  "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தோம். இது தொடர்பாக கடந்த ஆண்டே முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டியது கட்டாயம்.
  இட ஒதுக்கீடு: கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் நிலை குறித்துத்தான் தமிழக அரசு கவலை கொள்கிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கோ அல்லது கிராமப்புற மாணவர்களுக்கோ இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது.
  பிற மாநிலங்களில் "நீட்' தேர்வு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மருத்துவப் படிப்புகளுக்கு "நீட்" தேர்வை அவசியம் அமல்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசின் சார்பில் தெரிவித்துள்ளோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai