சுடச்சுட

  
  amithsha

  உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.
  அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வரும் ஒடிஸா மாநிலத்தில், நிகழாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 400 இடங்களில், 300 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
  இந்தச் சூழலில், பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கியது.
  பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
  கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ""அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி ஒரு தொடக்கமே'' என்று கூறினார். 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த ஆதரவுக்காக, பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாராட்டினர்.
  கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
  கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது, பாஜக உச்ச நிலையை அடைந்துவிட்டது என்று சிலர் கூறினார்கள்.
  அதேபோல், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்றபோது, அதையே சொன்னார்கள்.
  ஆனால், பாஜக இன்னமும் உச்ச நிலையை அடையவில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் முதல் நாடாளுமன்றம் வரை ஆட்சி நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் பாஜக பிரதிநிதித்துவம் பெற வேண்டும். நாடு முழுவதும் பாஜக முதல்வர்களின் ஆட்சி அமைய வேண்டும்.
  இந்த இலக்குகளை எட்டும் வரை பாஜக தொண்டர்கள் ஓயக்கூடாது என்று அமித் ஷா கூறினார்.
  இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களிடையே மிகவும் பிரபலமான தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மோடி தீவிர கவனம் செலுத்தி வருவதுதான் இதற்குக் காரணம்.
  நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியமைப்பதே பாஜகவின் இலக்காகும். இதேபோல், எதிர்காலத்தில் தமிழகம், கேரளத்திலும் ஆட்சியமைக்க பாஜக முனைப்புடன் செயல்படும் என்று அமித் ஷா கூறியதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai