சுடச்சுட

  

  மணிப்பூர் அமைச்சர் ராஜிநாமா: பாஜக கூட்டணி அரசுக்குப் பிரச்னை

  By DIN  |   Published on : 16th April 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jayantakumar

  மணிப்பூர் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் எல்.ஜெயந்தகுமார் சிங் (படம்), தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவரது இந்த முடிவு கூட்டணி அரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

  60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 28 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால், 21 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தேசிய மக்கள் கட்சி-4, நாகா மக்கள் முன்னணி-4, லோக் ஜன சக்தி-1, திரிணமூல் காங்கிரஸ்-1 மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
  இதில் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த எல்.ஜெயந்தகுமார் உள்பட 4 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜெயந்தகுமாரிடம் மேலும் 3 முக்கிய துறைகளும் ஒப்படைக்கப்பட்டன.
  இதனிடையே, சுகாதார, குடும்ப நலத் துறை இயக்குநரை மாநில அரசு அண்மையில் பணியிடைநீக்கம் செய்தது. அந்தத் துறையின் அமைச்சரான ஜெயந்தகுமாரை ஆலோசிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  இந்நிலையில், தனது அதிகாரத்தில் மாநில அரசு குறுக்கிடுவதாகக் கூறி, அமைச்சர் பதவியை ஜெயந்தகுமார் ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை, முதல்வர் பீரேன் சிங்கிடம் அவர் அளித்தார்.
  அவரது இந்த முடிவு, பாஜக கூட்டணி அரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க, முதல்வர் பீரேன் சிங் தில்லிக்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒடிஸாவில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்றுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
  பீரேன் சிங் மணிப்பூர் திரும்பிய பிறகே, ஜெயந்தகுமாரின் ராஜிநாமா கடிதம் மீது முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai