சுடச்சுட

  

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலில் இனி பயன்படுத்தக் கூடாது: அகிலேஷ் யாதவ்

  By DIN  |   Published on : 16th April 2017 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  akliesh

  ""இனிவரும் தேர்தல்கள் அனைத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது; வாக்குச்சீட்டு முறை அடிப்படையிலேயே அனைத்து தேர்தல்களையும் நடத்த வேண்டும்'' என்று சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.
  இதுகுறித்து லக்னௌவில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்போது கோளாறு ஏற்பட்டது? எப்போது அதன் தொழில்நுட்பம் தோல்வி அடைந்தது? என்பது குறித்து யாராலும் தெரிவிக்க முடியவில்லை.
  இயந்திரங்களை நம்பியிருக்க முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வாக்குச்சீட்டு அடிப்படையில் நடைபெறும் தேர்தல் முறையிலேயே எங்களுக்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்த வேண்டும்.
  உத்தரப் பிரதேச தேர்தலில், பாஜகவால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக மக்கள் கருதுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தலும், ஜாதி, மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை பரப்பியே நடத்தப்பட்டது. ஜாதி, மதத்தின் பெயரால் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு, வாக்குகள் கவர்ந்து செல்லப்பட்டுள்ளன.
  சமூகத்தின் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் சமாஜவாதி கட்சிக்கு செல்வாக்கை ஏற்படுத்தும் வகையில், கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி 2 மாதம் நடைபெறும். அப்போது, சமாஜவாதி அரசால் தொடங்கப்பட்ட திட்டங்கள், செய்த பணிகள் குறித்து மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லப்படும். இதேபோல், மிஸ்டு கால் மூலமும், சமூக ஊடகம் வாயிலாகவும் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெறும் என்றார் அகிலேஷ்.
  அப்போது அவரிடம், உத்தரப் பிரதேசம் முழுமைக்கும் குறைந்தது 18 மணி நேரம் மின்சாரம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அகிலேஷ் பதிலளிக்கையில், "முந்தைய சமாஜவாதி அரசால் ஏற்படுத்தப்பட்ட துணை மின்நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை மூலமே தற்போது மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது; மின்சாரத் துறைக்கு சமாஜவாதி அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்தது' என்றார்.
  மக்களின் தீர்ப்பை மதியுங்கள்-பாஜக: இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்து வரும் சமாஜவாதி கட்சிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
  அகிலேஷ் யாதவின் கருத்தானது, அவருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதுமட்டுமன்றி, உத்தரப் பிரதேச மக்களின் தீர்ப்பின் மீதும், தந்தை முலாயம் சிங் யாதவ், சித்தப்பா சிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் மீதும் நம்பிக்கையில்லை என்பதை தெரியப்படுத்துகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டதாக தேவையில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதை விடுத்து, உத்தரப் பிரதேச மக்கள் சமாஜவாதி கட்சியை நிராகரித்து விட்டனர் என்ற உண்மையை அக்கட்சி உணர வேண்டும். உத்தரப் பிரதேச தேர்தல் முடிவு, குறுகிய ஜாதி, மத அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பதையும் காட்டுகிறது என்றார் ராகேஷ் திரிபாதி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai