சுடச்சுட

    

    முஸ்லிம் இடஒதுக்கீடு உயர்வு: தெலங்கானா பேரவையில் இன்று மசோதா தாக்கல்

    By DIN  |   Published on : 16th April 2017 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முஸ்லிம், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினருக்கு (எஸ்டி) கல்வி, அரசு வேலை ஆகியவற்றில் வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டு சதவீதத்தை மேலும் உயர்த்த வகை செய்யும் மசோதா தெலங்கானா சட்டப் பேரவையில் ஞாயிற்றுக்கிழமை கூட உள்ள சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
    இந்த மசோதாவுக்கு அந்த மாநில அமைச்சரவையில் சனிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு தலா 12 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் (டிஆர்எஸ்) தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் இந்த மசோதாவை ஆளும் டிஆர்எஸ் தலைமையிலான அரசு உருவாக்கியுள்ளது.
    கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தபோது இதுதொடர்பாக மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகையில், "சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டுமானால் மத்திய அரசின் அனுமதி வேண்டும். இருப்பினும், இடஒதுக்கீட்டு சதவீதத்தை உயர்த்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறை அமலில் உள்ளது.
    அதனடிப்படையில், தெலங்கானா அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
    அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது-பாஜக: முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க தெலங்கானா அரசு மேற்கொண்டுவரும் முயற்சி அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று பாஜக குற்றம்சாட்டியது.
    இதுகுறித்து தெலங்கானா மாநில பாஜக தலைவர் கே.லக்ஷ்மண் கூறுகையில், "மாநில அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.
    மத அடிப்படையிலான இடஒதுக்கீடு மற்றொரு பாகிஸ்தான் உருவாக வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai