சுடச்சுட

  

  பிகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் லாரி, டிராக்டர் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு நக்ஸல் தீவிரவாதிகள் சனிக்கிழமை தீ வைத்தனர். இதில், ஒருவர் உயிரிழந்தார்.
  இதுதொடர்பாக, காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் கூறியதாவது: ஆயுதங்களை ஏந்திய நக்ஸல் தீவிரவாதிகள் சிலர் லக்கிசராய் மாவட்டம், பதன்பூர் கிராமத்துக்கு சனிக்கிழமை காலை சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 லாரிகள், டிராக்டர், பொக்லைன் இயந்திரம், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் தீ வைத்தனர். மேலும், பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய நபரை அவர்கள் சுட்டுக் கொன்றனர்.
  அப்பகுதி மக்களை அச்சுறுத்தவும், அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கவுமே நக்ஸல் தீவிரவாதிகள் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் என்றார் அசோக் குமார்.
  சத்தீஸ்கரில்: சத்தீஸ்கர் மாநிலம், காங்கேர் மாவட்டத்துக்கு உள்பட்ட கடாய்கோத்ரா கிராமத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும், சிறுமி ஒருவர் காயமடைந்தார்.
  இதுதொடர்பாக, காங்கேர் காவல்துறை கண்காணிப்பாளர் எம்.எல்.கோத்வானி கூறியதாவது: கடாய்கோத்ரா கிராமத்தையொட்டிய திறந்தவெளிப் பகுதியில் சனிக்கிழமை காலை 13 வயது சிறுவனும், சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நக்ஸல் தீவிரவாதிகளால் அங்கு பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இதில், அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தச் சிறுமி காயமடைந்தார் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai