சுடச்சுட

  

  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் திட்டம்: ஹிமாசலப் பிரதேசத்தில் தொடக்கம்

  By DIN  |   Published on : 16th April 2017 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தை ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  ஹிமாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டு தின விழா, சம்பா நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் வீரபத்ர சிங், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
  அப்போது, 10 இளைஞர்களுக்கு 1,000 ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார். இதன் மூலம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
  பிளஸ் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதி கொண்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவியை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி அளிக்கப்படும்.
  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்கு மாநில அரசு கூடுதல் முன்னுரிமை அளிக்கிறது. இதற்காக ரூ.500 கோடி மதிப்பிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இதன்படி 1,52,000 இளைஞர்களுக்கு இதுவரை திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  சுமார் 65,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்காகவும், வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் ரூ.640 கோடி நிதியுதவியுடன் கூடிய திட்டத்தை அமல்படுத்த கௌஷல் விகாஸ் நிகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  தற்போது ஐந்தாண்டுகள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்கள் மட்டுமே பணி வரன்முறை செய்யப்படுகின்றனர். இனி, மூன்றாண்டுகள் பணியை முடித்த அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் பணிவரன்முறை செய்யப்படுவார்கள்.
  பல்வேறு சமூக நலத் திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக சுமார் 3.89 லட்சம் பேருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.650 வழங்கப்பட்டு வருகிறது. இது 2017-18இல் ரூ.700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அன்னை தெரஸா தாய்மார்களின் நலன் காக்கும் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதியுதவி ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என்றார் வீரபத்ர சிங்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai