சுடச்சுட

  
  fraooq

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வெற்றி பெற்றார்.
  முன்னதாக ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 9-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது, பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெறும் 7.13 சதவீத வாக்குகளே பதிவாகின. இதனிடையே, வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் உள்ள 38 வாக்குச் சாவடிகளில் கடந்த 13-ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.
  தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ஃபரூக் அப்துல்லா, 48,554 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நஜீர் கானுக்கு 37,779 வாக்குகள் கிடைத்தன. சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஃபரூக், மூன்றாவது முறையாக மக்களவை எம்.பி.யாக தேர்வாகியிருக்கிறார். ஏற்கெனவே 1980-ம் ஆண்டிலும், 2009-ஆம் ஆண்டிலும் அவர் மக்களவை எம்.பி.யாக தேர்வானார். அவரது இந்த வெற்றி, ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
  ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: தேர்தல் வெற்றிக்கு பின்னர், செய்தியாளர்களிடம் ஃபரூக் கூறியதாவது:
  ஜம்மு-காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதில், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி அரசு தோல்வியடைந்துவிட்டது. எனவே, இந்த அரசைக் கலைத்துவிட்டு, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
  தேர்தலில் பலியான 8 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஃபரூக்கின் வெற்றியை அவரது கட்சியினர் கொண்டாடவில்லை.
  இடைத்தேர்தல் ஏன்? ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் வானி கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின்போது, பொதுமக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாக கூறி, ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த தாரிக் ஹமீத் கார்ரா தனது பதவியை ராஜிநாமா செய்தார். மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரான தாரிக், அக்கட்சியில் இருந்தும் விலகினார். இதையடுத்து, ஸ்ரீநகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
  சிக்கிமில் ஆளும் கட்சி வெற்றி: சிக்கிமின் அப்பர் பர்டக் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அங்கு ஆளும் கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) வெற்றி பெற்றது.
  அப்பர் பர்டக் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பிரேம் சிங் தமாங், நிதி மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றதையடுத்து, தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளானார். இதைத் தொடர்ந்து காலியான அந்த தொகுதிக்கு, கடந்த 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சுமார் 8,400 வாக்குகள் பெற்று ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் தில்லி ராம் தாபா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முறையே 449, 98 வாக்குகளே கிடைத்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai