சுடச்சுட

  

  சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களில் உஷார் நிலை

  By DIN  |   Published on : 17th April 2017 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chennaiair

  விமானங்களை கடத்த பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்த தகவல் வருமாறு:
  ஹைதராபாதைச் சேர்ந்த பெண் ஒருவர், மும்பை நகர காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சலில், 23 பேர் ஹைதராபாதில் இருந்து மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய 3 நகரங்களுக்கு தனித்தனி குழுவாக பிரிந்து சென்று, விமானங்களை கடத்த திட்டமிட்டிருப்பதாக 6 பேர் பேசியதை தாம் கேட்டதாக அந்தப் பெண் தெரிவித்திருந்தார். மேலும், 6 பேர் பேசியது உண்மையா? இல்லையா? என்பது குறித்து தமக்கு தெரியாது என்றும், காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டியது தமது கடமை என்பதால், இதை மின்னஞ்சல் மூலம் வெளிப்படுத்தியதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.
  இந்த மின்னஞ்சல் குறித்த தகவலை மும்பை காவல்துறை, அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுடனும், புலனாய்வு அமைப்புகளுடனும் சனிக்கிழமை இரவு பகிர்ந்து கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய 3 சர்வதேச விமான நிலையங்களிலும் குடியரசு தினம், சுதந்திர தினத்தின்போது செய்யப்படுவது போல பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டது.
  விமான நிலையங்களின் பாதுகாப்பு பணியை கவனித்து வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதித்தனர். விமான நிலையங்களுக்குள் பயங்கரவாதிகள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில், விமான நிலையங்களை சுற்றிலும் தீவிர ரோந்துப் பணியிலும் அவர்கள் ஈடுபட்டனர். விமான நிலைய பாதுகாப்புப் பணியில் மோப்ப நாய்கள், அதிரடிப் படை வீரர்களையும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஈடுபடுத்தியிருந்தது.
  இதுகுறித்து மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரல் ஓ.பி. சிங், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "மின்னஞ்சல் புரளியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், 3 விமான நிலையங்களிலும் விமானக் கடத்தலைத் தடுக்கும் வகையில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனவா? என்று விசாரணைகள் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai