சுடச்சுட

  

  ம.பி.யில் பசுவின் கன்றைக் கொன்றதற்கு பரிகாரம்: 5 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய பஞ்சாயத்தில் தீர்ப்பு

  By DIN  |   Published on : 17th April 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்தியப் பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் பசுவின் கன்றைக் கொன்றதற்காக சம்பந்தப்பட்ட நபரின் 5 வயது மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
  இதுகுறித்து, குணா மாவட்ட கூடுதல் ஆட்சியர் நியாஸ் கான் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
  மாவட்டத்தில் பஞ்சாரா சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த கோமதி, தனது 5 வயது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பஞ்சாரா சமூகத்தினர் நடத்திய பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முறையிட்டார்.
  அவரிடம் விசாரித்ததில், கடந்த 4 மாதங்களுக்கு முன் தன்னுடைய வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுவின் கன்றை விரட்ட நினைத்த அவரது கணவர் அதைக் கல்லால் தாக்கியது தெரியவந்தது. இதில், அந்தக் கன்று உயிரிழந்துவிட்டது.
  இதையடுத்து, அந்தச் சமூகத்தினர் சார்பில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில், கோமதியின் குடும்பத்தினர் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்றும், கிராமத்தினர் அனைவருக்கும் விருந்து படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  இதற்கு கோமதியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். பின்னர், பஞ்சாயத்து தரப்பில் மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  கிராமத்தில் திருமண வயதைக் கடந்தும் பல இளைஞர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்றும், இதற்கு பசுவின் கன்று கொல்லப்பட்டது தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
  இதற்குப் பரிகாரமாக கோமதியின் 5 வயது மகளுக்கும், விடிஷா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மதிக்காத கோமதி, ஆட்சியரகத்துக்கு வந்து புகார் தெரிவித்தார்.
  இதையடுத்து, குற்றவியல் நடைமுறை விதிகளின்படி கோமதியின் தந்தை, அந்தச் சிறுவனின் தந்தை உள்ளிட்ட 4 பேருக்கு தலா ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
  இதையும் மீறி குழந்தை திருமணம் நடைபெற்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நியாஸ் கான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai