சுடச்சுட

  

  முஸ்லிம் தனிச் சட்டத்தை அமல்படுத்தும் உரிமை எங்களுக்கு உள்ளது

  By DIN  |   Published on : 17th April 2017 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dump

  முஸ்லிம் தனிச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியல்சாசன ரீதியிலான உரிமை தனக்கு இருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) உறுதிபடத் தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மௌலானா வலி ரஹ்மானி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  பாபர் மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதே சமயத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே மேற்கொள்ளப்படும் எந்த சமரசத்தையும் ஏற்க மாட்டோம்.
  முத்தலாக் நடைமுறையைப் பொறுத்தவரை இது தொடர்பான நடத்தை நெறிமுறைகளை வெளியிட முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய வேண்டி வந்தால், ஷாரியா எனப்படும் இஸ்லாமிய மதச் சட்டத்தின்படி அதை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு விவாகரத்து அளிக்காதவர்கள் எங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவார்கள்.
  இந்த நடத்தை நெறிமுறைகளை மசூதிகளில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தொழுகையின்போது வாசிக்குமாறு அனைத்து மௌலானா மற்றும் இமாம்களை (முஸ்லிம் மதகுருமார்கள்) முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
  இஸ்லாமிய சட்டங்களில் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதை முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் சகித்துக் கொள்ளாது. நாட்டில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் தங்களின் தனிச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதை விரும்பவில்லை. முஸ்லிம் தனிச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியல்சாசன ரீதியிலான உரிமை, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்துக்கு உள்ளது என்றார் ரஹ்மானி.
  அவர் ஏற்கெனவே இது தொடர்பாக கருத்து கூறுகையில், "முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் மேற்கொண்ட கையெழுத்து இயக்கத்தின்போது அதில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும் தங்களுக்குப் பிடித்தமான மதத்தின் கொள்கைகளைப் பின்பற்றும் உரிமையை அரசியல்சாசனம் அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். தனிச் சட்டங்களை அமல்படுத்துவதில் தடைகள் எதுவும் விதிக்கப்படக் கூடாது' என்று குறிப்பிட்டிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai