சுடச்சுட

  
  modi

  முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பதை தமது அரசு உறுதிசெய்யும் என்று பிரதமர் மோடி கூறினார். குறிப்பாக முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் பெண்கள் ஏமாற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது:
  நமது முஸ்லிம் சகோதரிகளும் நீதி பெற வேண்டும் என்றும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது; யாரும் ஏமாற்றப்படக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
  அதேவேளையில் தலாக் விவகாரத்தை முன்வைத்து முஸ்லிம் சமூகத்தில் பூசல் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடக் கூறினார். முத்தலாக் போன்ற சமூகத் தீங்குகள் குறித்து அந்த சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அவர்களுக்கு (முஸ்லிம் பெண்கள்) நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். பாஜக பற்றி முஸ்லிம்களிடையே இருக்கும் அச்சத்தை கட்சியினர் போக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார் என்றார் நிதின் கட்கரி.
  ஓபிசி ஆணைய விவகாரம்: முன்னதாக, ஓபிசி ஆணையத்துக்கு அரசியல்சாசன அந்தஸ்து அளிக்கும் மத்திய அரசின் மசோதாவை பாராட்டி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் மோடி குறுக்கிட்டுப் பேசுகையில், "இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டின் பயன்களை முஸ்லிம்கள் ஏற்கெனவே அனுபவித்து வருகின்றனர். ஆனாலும், ஓபிசி ஆணையம் அவர்களின் பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு தீர்வு காண ஆவன செய்யும்' என்று தெரிவித்தார்.
  இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், ஓபிசி இடஒதுக்கீடானது மற்ற மதங்களைப் பின்பற்றுவோருக்கும் வழங்கப்படுகிறது' என்றார்.
  புதிய இந்தியாவை உருவாக்குவோம்: இதனிடையே, செயற்குழுக் கூட்டத்தில் மோடி மேலும் பேசியதாவது:
  பாஜகவுக்கும் அதன் தலைமையிலான அரசுகளுக்கும் மக்களுக்கு ஆதரவான நல்லாட்சி என்பதே செயல்திட்டமாகும். மகாத்மா காந்தி கடந்த 1942-இல் வெள்ளையனே வெளியேறு என்ற அறைகூவலை விடுப்பதற்கு முன் 20 ஆண்டுகளாக அவரது பேச்சுகளில் "சுதந்திரம்' என்ற அம்சமே முக்கியமாக இடம்பெற்றிருந்தது. அதேபோல் 2022-க்குள் எவ்வாறு சமூக பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவருவது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
  நமது அரசியல் பயணத்தில் அதிகபட்ச தோல்விகளைச் சந்தித்துள்ளோம். கட்சியை வளர்ப்பதற்காக நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த நமது தலைவர்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளனர்.
  நம்மைப் பொறுத்தவரை அரசியல் என்பது ஆட்சியைப் பிடிப்பதற்கான வழி அல்ல.
  மாறாக, நேர்மையான, பாரபட்சமற்ற சமூகத்துக்கான இலக்குகளை அடைய உதவும் வழியே அது. தேர்தல் வெற்றிகள் நம்மை அடக்கமானவர்களாக மாற்ற வேண்டும்.
  ஆட்சியை மாற்றுவது என்பது நமது இலக்காக இருக்கக் கூடாது. மாறாக, சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும். வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை மகிழ்ச்சியான, வளமான மற்றும் உலகில் முன்னணி நாடாக மாற்ற வேண்டும்.
  புதிய இந்தியாவைக் கட்டமைக்கவும், வரலாறு படைக்கவும் நீளம் தாண்டுதலைப் போன்ற பெருமுயற்சி எடுக்க வேண்டிய நேரம் இது. நாம் ஏராளமான பணிகளை ஆற்றியிருந்தாலும் அது போதாது. நமது முயற்சிகளையும் பணிகளையும் லட்சிய நோக்கில் தட்டி எழுப்ப வேண்டும்.
  ஏழைகளைக் கொண்டுள்ள பணக்கார நாடு இந்தியாவாகும். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஊழலும் கடந்த காலங்களில் இங்கு அமைந்திருந்த தொலைநோக்குப் பார்வையற்ற அரசுகளும்தான் காரணம். மனித வளம், வன வளம், நீர்வளம் ஆகியவையே புதிய பாரதத்தின் அடித்தளமாக இருக்கும்.
  எனது அரசு பதவியேற்றபோது மத்திய அரசின் வருவாய் ரூ.13 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.20 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளது. வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் அரசின் வருவாய் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்.
  பாஜக-வினர் மௌனம் காக்க வேண்டும்: பாஜக தலைவர்கள் பேசுவதில் வல்லவர்கள். எனினும், ஆட்சியில் இருக்கும்போது அவர்கள் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிலர் தங்கள் முன்பு மைக் இருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளை வெளியிட்டு விடுகின்றனர். மாறாக மௌனம் என்பது சிறந்த பண்பாகும்.
  அமித் ஷா ஒரு சாணக்கியர்: நமது கட்சியை அமித் ஷா சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் - குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்ற வெற்றிக்கு அவரது வியூகம்தான் காரணம். பாஜகவின் சாணக்கியர் அவர். நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்த அமித் ஷா மிகப்பெரிய அளவில் முயற்சியெடுத்தார். அவரது தலைமையின் கீழ் மேலும் பல மாநிலங்களிலும் வெற்றி பெறும்.
  எதிர்க்கட்சிகளின் கட்டுக்கதை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. இது எதிர்க்கட்சிகளால் புனையப்பட்ட மற்றொரு கட்டுக்கதையாகும்.
  இது போன்ற எதிர்மறையான விஷயங்களால் நமது கட்சியினரின் கவனம் சிதறி விடக்கூடாது. தேவாலயங்கள் மீதான தாக்குதல் போன்ற விவகாரங்களை வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்றார் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai