சுடச்சுட

    

    வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் வாங்க விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: நசீம் ஜைதி

    By DIN  |   Published on : 17th April 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    naseem

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டை வழங்கக் கூடிய கருவிகளை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதை விரைவுபடுத்துமாறு மத்திய அரசை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வலியுறுத்தியுள்ளார்.

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக 16 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வாக்குச்சீட்டு நடைமுறையை மீண்டும் கொண்டுவருமாறு கோரியிருந்தன.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
    தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டை வழங்கக் கூடிய கருவிகளை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஒப்புகைச்சீட்டு வழங்கும் நடைமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்கான தோராயமான கால அவகாசத்தைத் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
    இது தொடர்பாக நான் ஏற்கெனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை தற்போது நினைவூட்டுகிறேன். அந்தக் கடிதத்தில், "2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஒப்புகைச்சீட்டு வழங்கும் கருவிகளை வாங்குவதற்கான கோரிக்கையை (ஆர்டர்) முன்வைக்கா விட்டால் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களால் 2018-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்துக்குள் அந்தக் கருவிகளை வழங்குவது சிரமமாகிவிடும். அந்தக் காலகட்டத்துக்குள் கருவிகள் கிடைத்தால்தான் 2019-இல் நடைபெற உள்ள அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேவையை சமாளிக்க முடியும்' எனக் குறிப்பிட்டிருந்தேன்' என்று தனது கடிதத்தில் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
    அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள "தற்போதைய சூழ்நிலை' என்பதற்கான அர்த்தம் என்ன? என்று விளக்கமளிக்கா விட்டாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதையே இவ்வாறு சூசகமாகத் தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.
    ஒப்புகைச்சீட்டு கருவியானது ஒரு வாக்காளர் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாரோ அந்தக் கட்சியின் சின்னத்தை அச்சிட்டு வழங்கக் கூடிய சாதனமாகும். எனினும், அந்தச் சீட்டு வாக்குச்சாவடிக்குள் உள்ள ஒரு பெட்டியில் விழுந்து விடும். அதை வாக்காளர் கையோடு எடுத்துச் செல்ல முடியாது. வாக்காளர் அந்தச் சீட்டை 7 வினாடிகளுக்குள் பார்த்து முடித்த பின், அது மேற்கண்ட பெட்டியில் விழுந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னதாக, மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு நசீம் ஜைதி கடந்த மாதம் (மார்ச்) 22-ஆம் தேதி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்கள்தான் தயாரிக்கின்றன. அவற்றின் தற்போதைய உற்பத்தித் திறனின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 மாதங்களுக்குள் ஒப்புகைச்சீட்டு வழங்கும் கருவிகளை அந்த நிறுவனங்களால் தயாரிக்க முடியும்' என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai