மோசடி மன்னனாக வலம் வந்த சுகேஷ் சந்திரா யார்? அதிரவைக்கும் ஷாக் ரிப்போர்ட்

இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா மோசடி மன்னனாக வலம் வந்துள்ளார்.
மோசடி மன்னனாக வலம் வந்த சுகேஷ் சந்திரா யார்? அதிரவைக்கும் ஷாக் ரிப்போர்ட்


சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா மோசடி மன்னனாக வலம் வந்துள்ளார்.

இவர் ஏற்கனவே நடிகை லீனா மரியாவுடன் சேர்ந்து மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். அரசியல்வாதிகளின் மகன், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என பல வேடங்கள் ஏற்று இவர் செய்துள்ள மோசடிகளின் பெரிய பட்டியல் நீள்கிறது.

சுகேஷ் சந்திரா மீதுள்ள  வழக்குகளின் சுருக்கமான விவரம்

கருணாநிதியின் பேரன் என்று கூறி, தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசு கார்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் 2009-ல் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி என்று கூறி ஆள் மாறாட்டம் செய்து அரசு ஒப்பந்தங்கள் பெற்று மோசடி செய்ய முயன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகாவின் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் சுகேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைக் கொடுத்து கடன் பெற முயன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் சுகேஷ்.

சென்னை கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகன், திமுக பொதுச் செயலர் அன்பழகன் உறவினர் எனக் கூறி ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் சுகாஷ்.

கர்நாடகாவில் முதல் குமாரசாமியின் மகன் நிகில் கவுடாவின் நண்பர் எனக் கூறி 1 கோடி அளவுக்கு மோசடி, லயன் டேட்ஸ் நிறுவனத்திடம் பணம் மோசடி, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் போல நடித்து பண மோசடியில் ஈடுபட்டது, அமைச்சர்கள் போல சைரன் வைத்த வண்டியை பயன்படுத்தி பலரை ஏமாற்றிதாக புகார் என மோசடி மன்னனாக வலம் வந்துள்ளார் சுகாஷ்.

கொச்சியை சேர்ந்த இமானுவேல் சில்க்ஸின் உரிமையாளர், அவரது கடைத் திறப்பு விழாவுக்கு சினிமா நடிகைகளை அழைத்து வருவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக சுகேஷ் மீது புகார் அளித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி: அதிமுக அம்மா அணியான சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாக இடைத்தரகர் சதீஷ் சந்திரா என்பவர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து தினகரன் மீது தில்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. இதில் இரண்டு அணியும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்குச் சொந்தம் கொண்டாடி வந்தன.

இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இரண்டு அணிகளும் அந்த சின்னத்தையும் கட்சிப்பெயரையும் பயன்படுத்த தடைவிதித்தது. சசிகலா அணி அதிமுக அம்மா அணி எனவும், பன்னீர்செல்வம் அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி எனவும் இடைத் தேர்தலில் போட்டியிட்டன.

ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்தைப் பெற போட்டிப்போட்டு வந்தன. சமீபத்தில்தான் சசிகலா அணி தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய 8 வார அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.

இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் இன்று (ஏப்ரல் 17) விசாரணை நடத்த உள்ளது.

இந்நிலையில், இரட்டை சின்னத்தைப் பெற்றுதருவதற்காக இடைத்தரகர் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திரா என்பவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.30 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சதீஷ் சந்திரா தங்கியிருந்த ஹாட்டல் அறையில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற்று தருவதற்காக ரூ.1.5 கோடி வாங்கியதாக சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுதருவதற்காக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீது தில்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தில்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக யாருக்கும் நான் லஞ்சம் கொடுக்கவில்லை. லஞ்சம் பெற்றதாக தில்லியில் கைதாகி உள்ள சுகேஷ் சந்திரா யார் என்று எனக்கு தெரியாது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் கூறுகையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக யாரிடமும் நான் லஞ்சம் கொடுக்கவில்லை. அவ்வாறு தில்லியில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சந்திரா யார் என்றும் எனக்குத் தெரியாது. தொலைபேசியில் பேசியது கிடையாது.

அதிமுகவை முடக்குவதற்காக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் யார் உள்ளனர் என்று தெரியவில்லை.

தில்லியில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஏதாவது தில்லி போலீஸாரிடம் இருந்து சம்மன் வந்தால் சட்டப்படி அதனை சந்திப்பேன் என்றார்.

மேலும் கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை. அமைச்சர்கள் யாரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com