சுடச்சுட

  

  இந்தியாவை ஒற்றுமையுடன் வைத்திருக்க வேற்றுமையைக் கொண்டாட வேண்டும்

  By DIN  |   Published on : 18th April 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranap

  இந்தியாவை ஒற்றுமையுடன் வைத்திருப்பதற்கு மக்கள் இந்நாட்டின் வேற்றுமையைக் கொண்டாட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
  பிகாரின் சம்பாரண் பகுதியில் மகாத்மா காந்தி சத்யாகிரகப் போராட்டம் நடத்தியதன் நூற்றாண்டு நிறைவையொட்டி பாட்னாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
  ஆங்கிலேயர்களின் 190 ஆண்டு கால ஆட்சியானது ஒரு கருப்பு அத்தியாயத்தை விட்டுச் சென்றது. இக்கால கட்டத்தை இந்தியாவில் இருந்து வளங்களைக் கொள்ளையடித்தல் என்று வரலாற்று மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
  எனவே, காலனி ஆதிக்கச் சுரண்டல், துன்பங்கள் ஆகியவற்றை நாம் எதிர்த்துப் போராடியது போல் தற்போது மதவாதம், இனவாதம், பாரபட்சம் போன்றவற்றை எதிர்த்து நாம் இன்னொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
  இன்று இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இருக்கிறது என்றால் அதற்கு இந்தியா விவசாயிகள் வயலிலும், இந்தியத் தொழிலாளர்கள் ஆலைகளிலும், நமது விஞ்ஞானிகள் ஆய்வகங்களிலும் என இந்தியர்களின் உழைப்புதான் காரணம்.
  இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதற்கு நாம் இந்நாட்டின் வேற்றுமையைக் கொண்டாட வேண்டும். இந்தியர்களின் மனோபாவத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற ஒன்றுதான் மக்களை ஒற்றுமையுடன் வைத்துள்ளது. இந்தியா என்பது 130 கோடி மக்களின் தாயகமாகும். இங்கு 7 முக்கிய மதங்களும் பின்பற்றப்படுகின்றன.
  இந்த நாட்டில் காகாசியன் எனப்படும் ஐரோப்பிய வம்சாவளியினர், திராவிடர்கள், மங்கோலியர்கள் ஆகிய மூன்று இனக் குழுவினருடனும் ஓர் அமைப்பு, ஒரு கொடி, ஓர் அரசியல்சாசனம், நாம் இந்தியர் என்ற ஓர் அடையாளம் ஆகியவற்றோடு நாம் இணைந்து வாழ்கிறோம். இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடமாகும்.
  இந்தியராக இருப்போம் என்றும் இந்தியாவை அதற்குரிய இடத்துக்கு மேம்படுத்துவோம் என்றும் இந்தியர்கள் உறுதியேற்க வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.
  இந்த நிகழ்ச்சியில் பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai