சுடச்சுட

  

  'இரட்டை இலை' தேர்தல் சின்னத்துக்கு லஞ்சம்: தில்லியில் ரூ.1.30 கோடியுடன் இடைத்தரகர் கைது

  By DIN  |   Published on : 18th April 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arest

  தில்லியில் குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர்.

  அதிமுகவுக்குரிய 'இரட்டை இலை' தேர்தல் சின்னத்தை வி.கே.சசிகலா தலைமைக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர இடைத்தரகராக செயல்பட முயன்றதாக, தில்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
  இந்த விவகாரத்தில் சசிகலா தலைமைக்கு சாதகமாக செயல்பட அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மூலம் ரூ.1.30 கோடி தனக்கு வந்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு எதிராக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
  ரகசிய கண்காணிப்பு: இது குறித்து தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு துணை ஆணையர் மதுர் வர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது. அச்சின்னத்தை அதிமுகவின் தாற்காலிக பொதுச் செயலாளரான சசிகலா தரப்புக்கு ஒதுக்குவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தருவதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சிலருடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவதாக தில்லி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  இதையடுத்து அவரது நடமாட்டங்களை கடந்த ஒரு வாரமாகக் கண்காணித்தோம். இதைத்தொடர்ந்து தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவரை ஞாயிற்றுக்கிழமை மாலையில் கைது செய்தோம். அவரது அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.30 கோடி ரொக்கம், பல்வேறு முக்கிய ஆவணங்கள், 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒரு காரில் தன்னை எம்.பி. ஆக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் நாடாளுமன்ற நுழைவு பாஸ் ஒட்டப்பட்டிருந்தது.
  சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 8-ஆவது பிரிவு, இந்திய தண்டனைச் சட்டம் 170, 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரனை விசாரணைக்கு அழைப்பதற்கான நடைமுறையை காவல்துறை தொடங்கியுள்ளது என்றார்.
  ரூ.50 கோடிக்கு பேரம்: இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை தொடர்பாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் மூலம் டி.டி.வி.தினகரனுடன் சுகேஷ் சந்திரசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரம் பேசியதாக ரகசிய தகவல் வந்தது. அதிமுக சசிகலா அணிக்கு சாதகமாக இரட்டை இலை தேர்தல் சின்னத்தை ஒதுக்குவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாகவும், இதில் ரூ.1.30 கோடியை முதல் தவணையாக தினகரன் தரப்பு சுகேஷ் சந்திரசேகருக்கு சென்னை, தில்லியில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் வழங்கப்பட்டதாகவும் இத்தகவல் தில்லி காவல்துறையின் தனிப்படையினருக்குத் தெரியவந்தது.
  டி.டி.வி.தினகரனுக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்துள்ளது. இரு தரப்பும் பரஸ்பரம் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளது. எல்லாவற்றையும் சேகரித்து பணப் பரிவர்த்தனை நடந்ததை உறுதிப்படுத்திய பிறகே சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளோம்.
  இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்குமா என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம். கோடிக்கணக்கான பணப் பரிவர்த்தனை தொடர்புடைய இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை தனியாக விசாரிக்கும். குற்றவியல் தொடர்பு, ஹவாலாவில் ஈடுபட்ட நபர்களின் சதிச் செயல் ஆகிய கோணங்களை மட்டும் காவல் துறை விசாரிக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  இதனிடையே, கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  தனிப்படை பயணம்: இந்த விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு காவல் துறை குழு ஓரிரு தினங்களில் சென்னைக்கு வரவுள்ளது. இவர்களின் பயணத்தையொட்டி, விசாரணை அதிகாரிகள் தமிழகத்தில் தங்கியிருக்கும் நாள்களில் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கும்படி சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
  யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?
  தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மீது தமிழகம், கர்நாடகம் உள்பட தென் மாநிலங்களில் சுமார் 50 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
  பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், 10-ஆம் வகுப்பு வரை படித்தவர். பெங்களூரு தொழிலதிபரிடம் ரூ.12 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். 2003-இல், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்று கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டார். 2010-இல் இருவரிடம் ரூ.10 லட்சம் அளவுக்கு மோசடி செய்தார்.
  மலையாள திரைப்பட நடிகை லீனாவுக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தார்.
  போலி ஆவணங்களை பயன்படுத்தி ரூ.19 கோடி அளவுக்கு சென்னை பொதுத்துறை வங்கியில் மோசடி செய்தது, கர்நாடகத்தில் ஆணுறை விற்பனை ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 65 லட்சம் மோசடி, சொகுசு கார்கள் வாங்குவது, திருட்டு வழக்குகள் என தென் மாநிலங்களில் சுகேஷ் மீது சுமார் 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai