சுடச்சுட

  

  சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம்பெண்கள்: சமூகவலைதளத்தில் வெளியான புகைப்படங்களால் சர்ச்சை

  By DIN  |   Published on : 18th April 2017 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sabarimalai_women

   

  சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம்பெண்கள் வழிபாடு நடத்துவது போன்று சமூகவலைதளத்தில் வெளியான புகைப்படங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

  கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்கோயிலில் இருக்கும் அய்யப்பன், நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால், இந்த நடைமுறை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், சமூகவலைதளத்தில் இளம்பெண்கள் சிலர், சபரிமலை அய்யப்பன் கோயிலில் இருப்பது போன்று புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

  இதையடுத்து, இந்த சம்பவம் குறித்தும், சமூகவலைதளத்தில் வெளியான புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்தும் தேவசம்போர்டு புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  கொல்லத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, சபரிமலை அய்யப்பன் கோயிலில் சிறப்பு சலுகைகள் காட்டப்பட்டதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்களில் தொழிலதிபருடன் சேர்ந்து தடை செய்யப்பட்ட வயதை சேர்ந்த சில பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்து எந்த தடையும் கிடையாது. பாரம்பரியமான முறையில் சில குறிப்பிட்ட வயது பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  சபரிமலை அய்யப்பன் கோயிலில் விஐபி தரிசனம் என்ற பெயரில், சலுகைகளை பெற முயற்சிப்பது சட்டவிரோதம் ஆகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai