சுடச்சுட

  

  ஜீப்பில் இளைஞர் கட்டிச் செல்லப்பட்ட சம்பவம்: ராணுவம், பிஎஸ்எஃப்.புக்கு எதிராக காஷ்மீர் போலீஸார் வழக்குப்பதிவு

  By DIN  |   Published on : 18th April 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kashmir

  ஸ்ரீநகரில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பாதுகாப்புப் படையினரை கண்டித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

  ஜம்மு-காஷ்மீரில் ஜீப்பின் முன்பகுதியில் இளைஞர் ஒருவர் கட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ராணுவம், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மீது அந்த மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
  ஸ்ரீநகர் இடைத் தேர்தலின்போது பாரமுல்லா மாவட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது. அப்போது போராட்டக்காரர்களின் கல்வீச்சு தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஃபரூக் அகமது தார் என்ற இளைஞரை ராணுவத்தினர் தங்களது ஜீப்பின் முன்பகுதியில் கட்டி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட விடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து இந்திய ராணுவத்துக்கு எதிராக பீர்வா காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ரண்பீர் தண்டனையியல் சட்டத்தின் 342, 149, 506, 367 ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராணுவத்துக்கு எதிரான வழக்கு என்பதால், இதுகுறித்த விசாரணையும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது.
  பிஎஸ்எஃப் மீது மற்றோர் வழக்குப்பதிவு: இதேபோல், ஸ்ரீநகர் பாடாமாலு பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சஜத் ஹுசேன் ஷேக் என்ற இளைஞர் பலியானார். இந்தச் சம்பவம் குறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத நபர் மீது ஜம்மு-காஷ்மீர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  இணையசேவைகளை துண்டிக்க உத்தரவு: இதனிடையே, சமூகவலைதளம் மூலம் பொய்யான விடியோக்களை பரப்பி, போராட்டக்காரர்கள் வன்முறையை தூண்டலாம் என்ற சந்தேகத்தில், காஷ்மீரில் செல்லிடப் பேசி சேவைகளை அளித்து வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, 3ஜி, 4ஜி சேவைகளை உடனடியாக துண்டிக்கும்படி அந்த மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது
  பாதுகாப்புப் படையினர்-மாணவர்கள் மோதல்: இதனிடையே, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற மோதல் சம்பவங்களில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai