சுடச்சுட

  

  ஜீரம் பள்ளத்தாக்கு தாக்குதல்: நக்ஸல்களுக்கு பணம் கொடுத்தது சத்தீஸ்கர் அரசு: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 18th April 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஜீரம் பள்ளத்தாக்குப் பகுதியில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதற்கு முன்னதாக சத்தீஸ்கர் மாநில பாஜக அரசு அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
  தீவிரவாதிகளுக்கும், மாநில போலீஸாருக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள அக்கட்சி, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
  சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள ஜீரம் பள்ளத்தாக்கு அருகே கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர்.
  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசியப் புலனாய்வு அமைப்புக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உத்தரவிட்டிருந்தது. மத்தியில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விசாரணை நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு முன்னெடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அபய் சிங் என்பவர் சத்தீஸ்கர் மாநில காவல் துறைக்கு உளவுத் தகவல் கொடுத்து வந்தார். போலீஸாருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருப்பதை அறிந்த அவர், அதனை அம்பலப்படுத்த முயன்றார். ஆனால், பொய் வழக்குகளைப் பதிந்து அவரை மாநில போலீஸார் சிறையில் அடைத்தனர்.
  ஜீரம் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக நக்ஸல்களுக்கு கோடிக்கணக்கில் மாநில அரசு பணம் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.
  காங்கிரஸ் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சிவ்ரத்தன் சர்மா, 'காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai