சுடச்சுட

  

  திரைப்படத் தணிக்கை முறையில் திருத்தம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 18th April 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளைத் திருத்தியமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
  திரைப்படத் தணிக்கைச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை எதிர்த்து பிரபல ஹிந்தி நடிகரும், இயக்குநருமான அமோல் பாலேகர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
  தணிக்கை என்ற பெயரில் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்துக்கு கடிவாளமிடப்படுவதாக அதில் தெரிவித்திருந்த பாலேகர், இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்களை திரைப்படத் தணிக்கைக் குழு தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
  இதுதொடர்பாக, அந்த மனுவில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது:
  தற்போது இணைய உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையதளங்கள் வழியாகவும், சின்னத்திரை வழியாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் எந்தவிதமான தணிக்கையும் இன்றி தற்போது ஒளிபரப்பாகின்றன.
  அதேவேளையில், திரைப்படங்களுக்கு மட்டும் தணிக்கை என்ற பெயரில் கடும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதுதொடர்பான சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும். தணிக்கை நடைமுறைகள் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  அந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அதனைப் பரிசீலித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய பதிலளிக்குமாறு மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai