சுடச்சுட

  

  நாரதா ரகசிய விடியோ விவகாரம்: திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் 12 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

  By DIN  |   Published on : 18th April 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லஞ்சம் வாங்கியதாக நாரதா இணையதளம் வெளியிட்ட ரகசிய விடியோ காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முகுல் ராய், மதன் மித்ரா உள்ளிட்ட 12 திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது சிபிஐ திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தது.
  மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் சிலரிடம் இருந்து லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ காட்சிகளை நாரதா நியூஸ் டாட்காம் என்ற இணையதளம் வெளியிட்டது. இது அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சிகள் போலியானவை என்றும் தேர்தலில் தங்களின் வெற்றி வாய்ப்புக்கு எதிராகச் செய்யப்பட்ட சதி இது என்றும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
  இந்த விடியோ காட்சிகள் தொடர்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்துமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை கடந்த மாதம் (மார்ச்) 17-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு ஒரு மாத கால அவகாசத்தையும் அளித்தது.
  இந்நிலையில், நாரதா விடியோ காட்சி தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. முகுல் ராய், மக்களவை எம்.பி.க்கள் சௌகதா ராய், அப்ரூபா போத்தார், சுல்தான் அகமது, பிரசுன் பானர்ஜி, ககோலி கோஷ் தஸ்திதார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
  மேலும், அக்கட்சியைச் சேர்ந்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சோவன் சாட்டர்ஜி, உள்ளாட்சித் துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி, முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா, எம்எல்ஏ இக்பால் அகமது, ஐபிஎஸ் அதிகாரி முஸ்தபா ஹுசைன் மிர்ஸா ஆகியோரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai