சுடச்சுட

  

  முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த வழக்கு: சஹாரா நிறுவனத்தின் ரூ.34 ஆயிரம் கோடி சொத்தை விற்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 18th April 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி அளிக்காமல் மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், சஹாரா குழும நிறுவனத்துக்குச் சொந்தமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ரூ.34 ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்தை விற்பனை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செபி-சஹாரா நிறுவனத்தின் பணத்தை திருப்பிச் செலுத்துதல் கணக்கில் ரூ.5,092 கோடியை ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் சஹாரா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அவ்வாறு செலுத்தவில்லையெனில், உச்ச நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட புணே அருகே இருக்கும் ரூ.34 ஆயிரம் கோடி மதிப்புடைய அம்பி வேலி நகரத்தை விற்பனை செய்ய உத்தரவிடப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். எனினும், உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு திங்கள்கிழமையுடன் முடிவடைந்தபோதிலும், சஹாரா நிறுவனம் ரூ.5,092 கோடியை செலுத்தவில்லை.
  இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், ஏ.கே. சிக்ரி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ரூ.5,092 கோடி தொகையை சஹாரா குழும நிறுவனம் செலுத்தாததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
  இதுவரையிலும் நீங்கள் தெரிவித்தவை அனைத்தும் போதும். ஆம்பி வேலி நகரத்தை விற்பனை செய்து, அதுதொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேரிடையாக தாக்கல் செய்யும்படி, மும்பை உயர் நீதிமன்ற அதிகாரிக்கு உத்தரவிடுகிறோம். அந்த அதிகாரியிடம், அம்பி வேலி நகரம் தொடர்பான சொத்துகள் அடங்கிய விவரங்களை, சுப்ரதா ராய், அவரது குழுமத்திலுள்ள நிறுவனங்கள், செபி அமைப்பு ஆகியவை 48 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டும். இந்த வழக்கில், சுப்ரதா ராய் வரும் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
  அமெரிக்காவில் உள்ள சஹாரா குழுமத்துக்குச் சொந்தமான ஹோட்டல்களை விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில், பிரகாஷ் சுவாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவை விட்டு வெளியேற அவருக்கு தடை விதித்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai