சுடச்சுட

  

  முஸ்லிம்கள் இடஒதுக்கீடு மசோதா ஒரு குப்பைக் காகிதம்: பாஜக சாடல்

  By DIN  |   Published on : 18th April 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தெலங்கானாவில் கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மாநில அரசு நிறைவேற்றியுள்ள மசோதா, வெறும் குப்பைக் காகிதம் என்றும், அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகாத அந்த மசோதா மத்திய அரசு அளவில் நிராகரிக்கப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.
  இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ், ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
  மதத்தை அடிப்படையாகக் கொண்டு, இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனை மீறும் வகையில் தெலங்கானா அரசின் மசோதா உள்ளது. மேலும், மசோதாவை நிறைவேற்றியதில், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
  அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகாத, வெறும் குப்பைக் காகிதம் போன்ற அந்த மசோதா, மத்திய அரசு அளவில் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும். மசோதாவுக்கு எதிராக மாநில பாஜக சார்பில் நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
  தெலங்கானாவில் பொறுப்பற்ற வகையில் செயல்படும் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசின் முகத்திரையைக் கிழிக்க இந்த விவகாரத்தை பாஜக பயன்படுத்தும். பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.
  முன்னதாக தெலங்கானாவில் கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாகவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 12 சதவீதமாகவும் அதிகரிக்கும் மசோதா, அந்த மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு 62 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai