சுடச்சுட

  

  ரூ.1,000 கோடி செலவில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிறது 'மகாபாரதம்'

  By DIN  |   Published on : 18th April 2017 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mohanlal1

   

  இந்திய இதிகாசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் மகாபாரதத்தை, ரூ.1,000 கோடி செலவில் பிரம்மாண்டத் திரைப்படமாக எடுக்க பிரபல தொழிலதிபர் பி.ஆர். ஷெட்டி திட்டமிட்டுள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்படவுள்ள இந்தப் படத்தை பிரபல விளம்பரப் பட இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார்.

  இதில், மோகன்லால் உள்ளிட்ட இந்திய அளவில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகள் மட்டுமன்றி சர்வதேச (ஹாலிவுட்) திரைப்படக் கலைஞர்களும் நடிக்கவுள்ளனர். அதேபோன்று உலக அளவில் புகழ் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

  மலையாள இலக்கிய உலகின் ஜாம்பவான் எம்.டி.வாசுதேவன் நாயர் இந்தப் படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதுகிறார். பீமனின் பார்வையில் மகாபாரதத்தை எடுத்துரைக்கும் வகையில் 'ரெண்டாம் மூழம் (Randamoozham)' என்ற நாவலை அவர் எழுதினார். பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்த அந்த நாவலை மையமாகக் கொண்டே இந்தப் படம் உருவாகவுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2018) செப்டம்பரில் தொடங்குகிறது. 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதல் பாகத்தையும், அதற்கு அடுத்த மூன்று மாதங்களில் இரண்டாம் பாகத்தையும் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஐக்கிய அமீரக நாடுகளில் (யுஏஇ) பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான பி.ஆர்.ஷெட்டியின் நிறுவனம்தான் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

  உலக அளவில் பேசப்படும் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக மகாபாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ள ஷெட்டி, இந்தப் படம் 100 மொழிகளில் டப்பிங் (மொழியாக்கம்) செய்யப்பட வாய்ப்புள்ளது என்றார். மேலும், ஹாலிவுட்டுக்கு நிகரான இந்தியப் படமாக மகாபாரதம் இருக்கும் என்றும், குறைந்தது 100 கோடி பேரையாவது இப்படம் சென்றடையும் என்றும் ஷெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதக் கதையின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக ரூ.1,000 கோடி முதலீடு செய்ய தயாரிப்பாளர் ஷெட்டி முன்வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai