சுடச்சுட

    

    அமெரிக்காவில் மேலும் ஓர் இந்தியர் மீது தாக்குதல்: இனவெறி காரணமா?

    By DIN  |   Published on : 19th April 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்காவின் மேடிசன் சதுக்கம் அருகே இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இனவெறியின் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
    அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அந்நாட்டில் வசிக்கும் நம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியாவைச் சேர்ந்த ஹர்கிரத் சிங் (25) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றார். அங்கு வாடகைக் கார் ஓட்டுநராக அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது காரில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் பயணித்ததாகத் தெரிகிறது.
    அவர்கள் அனைவரும் மது அருந்தியிருந்ததாகவும், எங்கு செல்ல வேண்டும்? என்பதைத் தெளிவாகக் கூறாமல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேடிசன் சதுக்கம் அருகே சென்றபோது அவர்கள் அனைவரும் ஹர்கிரத் சிங்கைத் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியுள்ளனர். மேலும், காரை சேதப்படுத்திய அவர்கள் சிங்கைத் தாக்கியுள்ளனர். இறுதியாக அவரது தலைப்பாகையைப் பறித்து அவர்கள் வீசி எறிந்துள்ளனர்.
    இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாரளித்த ஹர்கிரத் சிங், இத்தகைய இனவெறித் தாக்குதல்களைப் பார்க்கும்போது அமெரிக்காவில் வசிப்பதற்கே அச்சமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அமெரிக்க போலீஸார், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைத் தேடி வருகின்றனர். இந்தியர்களை சுட்டுக் கொல்வதும், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதும் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai