சுடச்சுட

  

  ஆன்டாரியோ மாகாண பேரவைத் தீர்மானம்: கனடா அமைச்சரிடம் ஜேட்லி எதிர்ப்பு

  By DIN  |   Published on : 19th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jetly

  தில்லியில், பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் சஜ்ஜன்.

  தில்லியில் கடந்த 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை இனப் படுகொலை என்று வர்ணித்து கனடா நாட்டின் ஆன்டாரியோ மாகாண சட்டப் பேரவை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்துக்கு, இந்தியா வந்துள்ள கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் சஜ்ஜனிடம் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
  ஏழு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஹர்ஜித் சிங் சஜ்ஜன், அருண் ஜேட்லியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது.
  இதனிடையே, சீக்கியர் கலவரம் தொடர்பாக ஆன்டாரியோ மாகாண சட்டப் பேரவை நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக இந்தியாவில் கொந்தளிப்பு நிலவியது என்று சஜ்ஜனிடம் ஜேட்லி எடுத்துக் கூறினார். அத்தீர்மானத்துக்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்தார்.
  இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசத் சஜ்ஜன் திட்டமிட்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்குச் சென்று அவர் வழிபட உள்ளார்.
  முன்னதாக, காலிஸ்தான் (தனி பஞ்சாப்) ஆதரவு சிந்தனை கொண்ட ஹர்ஜித் சிங் சஜ்ஜனை, தாம் சந்திக்கப் போவதில்லை என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்திருந்தார். இது அந்த மாநில அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
  இதனிடையே, பஞ்சாப் பொற்கோயிலுக்கு வியாழக்கிழமை (ஏப்.20) வருகை தரும் ஹர்ஜித் சிங்கை கெளரவிக்கப் போவதாக சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai