சுடச்சுட

  

  ஏடிஎம்-களில் தலைநகரில் பணம் தாராளம்; பல்வேறு பகுதிகளில் கடும் அவதி

  By DIN  |   Published on : 19th April 2017 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  atm

  புது தில்லி: மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொண்டு சுமார் 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்-களில் பணம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
  கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணத்துக்கு எதிரான முக்கிய நடவடிக்கை இது என்று மத்திய அரசு அறிவித்தாலும், பொதுமக்கள் இதனால் பெரும் பிரச்னைக்கு உள்ளானார்கள். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுவதில் பெரும் சிக்கல் நீடித்தது. உரிய முறையில் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளாததால் போதிய அளவு புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
  ஏடிஎம்-களில் நிரப்ப போதிய அளவு பணம் இல்லாததால் பெரும்பாலான ஏடிஎம்-கள் சுமார் இரண்டு மாத காலத்துக்கு மூடப்பட்டே இருந்தன. பணம் இருந்த ஒரு சில ஏடிஎம்-களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
  ஏப்ரலில் நிலைமை மோசம்: கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்த நிலைமை சற்று சீரடைந்து, ஏஎடிஎம்-களில் ஓரளவுக்கு பணம் கிடைத்துவந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் மீண்டும் நிலைமை மோசமடைந்து ஏடிஎம்-களில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.
  இது தொடர்பாக "லோக்கல் சர்க்கிள்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் மத்தியில் ஆய்வு நடத்தியது. அதில், கடந்த ஏப்ரல் 5 முதல் 8-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஏடிஎம்-களில் தங்களால் பணம் எடுக்க முடியவில்லை என்று 36 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
  ஏப்ரல் 13 முதல் 16-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நிலைமை மேலும் மோசமடைந்தது. அக்காலகட்டத்தில், ஏஎடிஎம்-களில் போதிய பணம் இல்லை என்று 48 சதவீதம் பேர் புகார் கூறியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 8,700 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  காரணம் என்ன? எடிஎம்ஏ-களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த மார்ச் 13-ஆம் தேதி முழுமையாக விலக்கிக் கொண்டது. அதன் பிறகு, பெரும்பாலானவர்கள் வங்கியில் இருந்தும், ஏஎடிஎம் மூலமும் பணத்தை அதிக அளவில் எடுத்து வருவதால் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  இது தவிர பல்வேறு வங்கிகளில் ஏஎடிஎம்-ளில் இருந்து ஒரு மாதத்தில் 5 முறைதான் பணம் எடுக்க வேண்டும். அதற்கு மேல் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று புதிய விதியை வகுத்துள்ளது. இதன் காரணமாகவும் பெரும்பாலானவர்கள் அதிக பணத்தை எடுத்து கையில் ரொக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏடிஎம்-களில் போதிய பணத்தை நிரப்ப முடியாமல் வங்கிகள் தவிக்கின்றன. இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் இது பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
  உச்சத்தில் ஹைதராபாத்: இந்தியாவிலேயே ஹைதராபாத் நகரில்தான் ஏடிஎம்-களில் பணம் கிடைக்காத பிரச்னை உச்சத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக புணே உள்ளது. இந்த இரு நகரங்களிலும் முறையே 83, 69 சதவீத மக்கள் தங்களுக்கு ஏடிஎம்-களில் பணம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
  தலைநகரில் தாராளம்: அதே நேரத்தில் தலைநகர் தில்லியில் ஏடிஎம்-களில் தாராளமாக பணம் கிடைத்து வருகிறது. அங்கு 11 சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு ஏடிஎம்-களில் போதிய பணம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai