சுடச்சுட

  

  கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்: அமலாக்கத் துறை மீது ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 19th April 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pchidambaram

  அன்னியச் செலாவணி விதிமீறலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை உருவாக்கி வருவதாக அவரது தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
  இதுதொடர்பாக, தில்லியில் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  அமலாக்கத் துறையால் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், கார்த்தி சிதம்பரத்தின் பங்கின் ஒருபகுதி கூட குறிப்பிடப்படவில்லை. ஆனால், இருநிறுவனங்களுக்கு இடையேயான குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் விவகாரத்தில், முக்கிய காரணகர்த்தாவாக, மிகுபயனாளியாக கார்த்தி சிதம்பரம் தெரிகிறார் என்று மிகைப்படுத்தப்பட்ட, கேலிக்குரிய குற்றச்சாட்டை அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தெரிகிறார் என்று குறிப்பிட்டுள்ளதற்கு என்ன அர்த்தம்? இந்த வழக்கில் அவரை சிக்க வைப்பதற்கு, அமலாக்கத்துறை கடும் குற்றச்சாட்டுகளை உருவாக்கி வருகிறது என்பதே இதற்கு அர்த்தமாகும்.
  சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் முன்பு தங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளன. மேலும், கார்த்தி சிதம்பரம் தங்களது நிறுவனங்களில் பங்குதாரராகவோ அல்லது இயக்குநராகவோ இல்லை என்றும் விளக்கியுள்ளன. திங்கள்கிழமை தெரிவித்தபடி, கார்த்திக்கு நோட்டீஸ் அளிக்கப்படும்பட்சத்தில், அதற்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
  பின்னணி: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் கண் மருத்துவமனை அதன் பங்குகளை வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அன்னியச் செலாவணி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
  இந்த மருத்துவமனையின் பங்குகளை கார்த்தி சிதம்பரம் பங்குதாரராக இருந்த சிங்கப்பூரில் உள்ள அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் வாங்கியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, 'அன்னியச் செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறியதால் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்பது குறித்து உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கார்த்தி சிதம்பரம், அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம், தனியார் கண் மருத்துவமனை நிர்வாகிகள் (இயக்குநர், அவரது மனைவி, உறவினர்) ஆகியோருக்கு மத்திய அமலாக்கத் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai