சுடச்சுட

  

  நாகா தீவிரவாத அமைப்புகளுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

  By DIN  |   Published on : 19th April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகாலாந்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு வரும் 28-ஆம் தேதியில் இருந்து மேலும் ஓராண்டுக்கு (2018 ஏப்ரல் வரை) நீட்டித்துள்ளது.
  வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - மறுமலர்ச்சி (என்எஸ்சிஎன்-ஆர்), நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - நியோக்பாவ்-கிட்டோவி (என்எஸ்சிஎன்-என்கே) ஆகிய அமைப்புகளுடன் மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. இதற்கான உடன்பாட்டில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் சத்யேந்திர கர்க் மற்றும் என்எஸ்சிஎன்-ஆர் அமைப்பின் சார்பில் தோஷி லாங்கியூமர், இம்லாங்நக்ஷி சாங், என்எஸ்சிஎன்-என்கே அமைப்பின் சார்பில் ஜாக் ஜிமோமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
  இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை வரும் 28-ஆம் தேதியில் இருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  நாகாலாந்தில் மேற்கண்ட இரு தீவிரவாத அமைப்புகளைத் தவிர, என்எஸ்சிஎன் - ஐசக்-முய்வா, என்எஸ்சிஎன் - கப்ளாங் ஆகிய அமைப்புகளும் இயங்கி வருகின்றன. அவற்றில் என்எஸ்சிஎன் - ஐசக்-முய்வா அமைப்பானது மத்திய அரசுடன் கடந்த 1997-இல் செய்து கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை இதுவரை பராமரித்து வருகிறது.
  எனினும், என்எஸ்சிஎன் - கப்ளாங் அமைப்பு மணிப்பூரில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தி 18 பேரைக் கொன்றதன் மூலம், மத்திய அரசுடனான சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai