சுடச்சுட

  

  நாடாளுமன்றத்தில் தேசிய கீதம், பாடல் கட்டாயமாக்கப்படுமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 19th April 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கீதம், தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  இதுதொடர்பாக தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
  நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் தேசிய கீதம், வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், தேசிய கீதத்தையும், வந்தே மாதரம் பாடலையும் ஊக்குவிக்க தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டும்.
  அதேபோல், நாட்டில் சகோதரத்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
  இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், எம்.எம். சந்தான கௌடர் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா கூறியதாவது:
  தேசிய கீதத்துக்கும், தேசியக் கொடிக்கும் மரியாதை அளிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரி சிலர் நீதிமன்றத்தை அணுகுவது துரதிருஷ்டவசமான ஒன்று. அவ்வாறு மரியாதை அளிக்கக் கோருவதை சமூகத்தில் சில தரப்பினர் எதிர்ப்பது என்பது அதனைக் காட்டிலும் துரதிருஷ்டவசமானது. தேசிய கீதத்துக்கும், தேசியக் கொடிக்கும் மரியாதை அளிப்பது என்பது எவ்வித சமரசத்துக்கும் இடமில்லாத ஒன்றாகும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது.
  எனினும், நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களில் தேசிய கீதமும், வந்தே மாதரம் பாடலும் கட்டாயமாக்கக் கோருவது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.
  இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், மேற்குறிப்பிட்ட மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
  எழுந்து நிற்பதிலிருந்து விலக்கு: இதனைத் தொடர்ந்து, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது எழுந்து நிற்பதில் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நீதிபதிகள் விலக்கு அளித்தனர். அதன்படி, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், ஆட்டிஸம் பாதிப்பு உடையவர்கள், மூளைப் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, தொழுநோய், பார்வைத் திறனற்றோர் ஆகியோருக்கு திரைரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது எழுந்து நிற்பதிலிருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai