சுடச்சுட

  

  பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களுக்கு எதிரான மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

  By DIN  |   Published on : 19th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிராக சதி குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்யக் கோரி தொடுக்கப்பட்டிருக்கும் மனு மீது உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (ஏப்.19) தீர்ப்பு அளிக்கவுள்ளது.
  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டடம் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக 2 வகையிலான வழக்குகள், தனித்தனி நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. அதாவது, பெயர் குறிப்பிடப்படாத கரசேவகர்களுக்கு எதிரான வழக்குகள், லக்னௌ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, உமா பாரதி, உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகள், ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
  இதனிடையே, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச் சதி எனும் குற்றச்சாட்டை கடந்த 2010-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
  இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி மகபூப் அகமது என்பவரும், சிபிஐ அமைப்பினரும் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஸ், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை புதன்கிழமை அளிக்கவுள்ளது.
  முன்னதாக, இந்த மனுக்கள் மீது கடந்த 6-ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது, 2 நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளையும் ஒன்றாக இணைக்கப் போவதாகவும், ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளை, லக்னௌ நீதிமன்றத்துக்கு மாற்றப் போவதாகவும் உச்ச நீதிமன்றம் சூசகமாக குறிப்பிட்டிருந்தது. இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai